தமிழக அரசின் மக்கள் நலத்திட்டங்கள் குறித்து கள ஆய்வு செய்து, மாதந்தோறும் அறிக்கை அளிக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர்களுக்கு EPS உத்தரவு!!
தமிழகத்தில் நடைபெற்று வரும் அரசின் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தொடர்பாக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, மாவட்ட ஆட்சியர்களுடன் இன்று ஆலோசனை மேற்கொண்டார். சென்னை தலைமைச்செயலகத்தில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில் தொடக்க உரை நிகழ்த்திய முதலமைச்சர், குடிமராமத்து, மழைநீர் சேகரிப்பு, பசுமை வீடுகள் கட்டும் திட்டம், முதியோர் ஓய்வூதியத் திட்டம், இலவச பட்டா வழங்கும் திட்டம் உள்ளிட்ட அரசின் பல்வேறு திட்டங்களின் செயல்பாடுகள் தொடர்பாக ஆய்வு செய்து மாதந்தோறும் தமக்கு அறிக்கை அளிக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
தமிழக அரசின் திட்டங்கள் மக்களை முழுமையாகச் சென்றடைய மாவட்ட ஆட்சியர்கள் களத்தில் இறங்கி அரும்பணியாற்ற வேண்டும் என்று வலியுறுத்தியுள்ள முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி, இதே போன்ற மாவட்ட ஆட்சியர்களின் ஆலோசனைக் கூட்டம் 4 மாதங்களுக்கு ஒருமுறை நடைபெறும் என்றும் தெரிவித்தார். இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்தின் முதல் நாளான இன்று, கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, விருதுநகர், ராமநாதபுரம், மதுரை, தேனி, உட்பட 16 மாவட்ட ஆட்சியர்கள் பங்கேற்றனர்.
இக்கூட்டத்தில், துணை முதல்வர ஓ.பன்னீர்செல்வம், அமைச்சர்கள் தலைமை செயலாளர் சண்முகம் மற்றும் அனைத்து துறை செயலாளர்களும் பங்கேற்றனர்.