சென்னை: தமிழ்நாட்டில் (Tamil Nadu) அதிகரித்து வரும் கொரோனாவை கட்டுக்குள் கொண்டுவரவும், அதேநேரத்தில் கொரோனாவின் தீவிர தன்மையை குறைக்க சோதனை அடிப்படையில் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பி சி ஜி தடுப்பு மருந்தை முதியவர்களுக்கு வழங்க தமிழக அரசு முடிவு செய்துள்ளது.
இந்த பி சி ஜி (BCG) தடுப்பு மருந்தை 60 முதல் 95 வரையிலான முதியவர்களுக்கு செலுத்துவதன் மூலம் உயிரிழப்பு குறைய வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது. இந்த சோதனை முயற்சியை தேசிய காசநோய் ஆராய்ச்சி நிறுவனம் விரைவில் தொடங்கவுள்ளதாகவும் தமிழக அரசு (TN Govt) தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
தேசிய தடுப்பூசி திட்டத்தின் கீழ், கடந்த 50 ஆண்டுகளாக பி சி ஜி (BCG) தடுப்பு மருந்துகள் குழந்தைகளுக்கு பாதுகாப்பான முறையில் வழங்கப்பட்டு வருகிறது என்பது குறிப்பிடதக்கது.
முதியவர்களுக்கு பி சி ஜி (BCG) தடுப்பூசி செலுத்துவதன் மூலம் கொரோனா நோயின் தீவிரத் தன்மையை குறைக்கவும், அதன்மூலம் உயிரிழப்பை குறைக்கவும் பேருதவியாக இருக்கும். இதுபோன்ற மக்கள் நலன் காக்கும் தொடர் பணிகள் மேலும் தீவிரப்படுத்தும் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.