‘லங்கேஷ் பத்திரிகே’ ஆசிரியர் பெங்களூருவில் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்திற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அதைக்குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது:-
இந்துத்துவா வகுப்புவாத மதவெறிக் கும்பலின் ரத்த வெறிக்கு மேலும் ஒரு சிந்தனையாளர் பலி ஆகி உள்ளார். கன்னட பத்திரிகையான ‘லங்கேஷ் பத்திரிகே’ வார இதழின் நிறுவனரும், முதன்மை ஆசிரியருமான ‘கௌரி லங்கேஷ்’ பெங்களூருவில் செப்டம்பர் 5-ம் தேதி இரவு தனது வீட்டில் இருந்தபோது, மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டு இருக்கிறார்.
பெண் பத்திரிகையாளராக பல்வேறு ஆங்கில நாளேடுகளில் பணியாற்றிய கௌரி லங்கேஷ் வகுப்புவாதம், மதவாதத்திற்கு எதிராக தொடர்ச்சியாக குரல் கொடுத்து வந்தவர் ஆவார். ஆர்.எஸ்.எஸ். மற்றும் இந்துத்துவா நாசகார சக்திகளின் வலதுசாரி கொள்கைகளை துணிச்சலுடன் தீவிரமாக எதிர்த்து வந்தவர்.
குஜராத் மாநிலத்தில் நடைபெற்ற கலவரங்கள், இர்ஷத் ஜஹான் உள்ளிட்ட போலி மோதல் கொலைகள் குறித்து ராணா ஐயூப் எழுதிய ‘குஜராத்-பைல்ஸ்’ நூலை கன்னடத்தில் மொழிபெயர்த்த கௌரி லங்கேஷ், மனித உரிமை அமைப்புகளின் தேசிய கூட்டமைப்பின் செயற்குழு உறுப்பினராகவும் இருந்தவர்.
மனித உரிமைகள் செயற்பாட்டாளரான கௌரி லங்கேஷ், நக்சலிசம் குறித்து மிக விரிவாக பல ஆய்வுக் கட்டுரைகள் எழுதியவர். நக்சலைட்டுகளின் வாழ்வில் மறுமலர்ச்சி காண அவர்களுக்காக பரிவுடன் செயல்பட்டு வந்தார். தமது பத்திரிகையின் வாயிலாக சமூக நல்லிணக்க மன்றம் (Communal Hormony Forum) என்ற அமைப்பை முன்னெடுத்து வந்தார்.
இந்துத்துவா சக்திகள் நாடு முழுவதும் ஏவி விட்டு வரும் மத பயங்கரவாதத்திற்கு எதிராக கடுமையாகக் குரல் கொடுத்துப் பேசியும், எழுதியும் வந்தார். மதவெறியர்கள், கௌரி லங்கேஷ் மீது பல அவதூறு வழக்குகளைத் தொடர்ந்தனர். கொலை மிரட்டல்கள் இருந்தபோதும், துணிச்சலும் நேர்மையும் கொண்ட பத்திரிகையாளராக தனது கொள்கையில் உறுதியாக இருந்தவர். இந்துத்துவா கருத்தியலை எதிர்த்ததற்காக கௌரி லங்கேஷ் சுட்டுக்கொல்லப்பட்டு இருப்பது வன்மையான கண்டனத்துக்கு உரியது ஆகும்.
2015 ஆகஸ்டு 30-ம் தேதி கர்நாடகாவில் சாகித்ய அகாதமி விருதுபெற்ற கன்னட எழுத்தாளரும், ஹம்பி கன்னடப் பல்கலைக் கழகத்தின் முன்னாள் துணை வேந்தருமான எம்.எம்.கல்புர்கி மர்ம நபர்களால் கொடூரமாகச் சுட்டுக்கொல்லப்பட்டார்.
அதற்கு முன்பு மகாராஷ்ராவில் 2015 பிப்ரவரி 20-ம் தேதி முற்போக்கு எழுத்தாளரும், இடதுசாரி சிந்தனையாளருமான 82 வயது கோவிந்த் பன்சாரே நடைபயிற்சியின்போது சுட்டுக்கொல்லப்பட்டார்.
2013-ல் அதே மகாராஷ்டிரா மாநிலம் புனே நகரில் மூட நம்பிக்கைகளுக்கு எதிராகப் போராடிய சிந்தனையாளர் நரேந்திர தபோல்கர் சுட்டுக்கொல்லப்பட்டார்.
தபோல்கர், பன்சாரே, கல்புர்கி ஆகிய முற்போக்கு எழுத்தாளர்கள் இந்துத்துவா மதவெறிக் கும்பலுக்கு எதிராக செயல்பட்டதால் சுட்டுக் கொல்லப்பட்டதைப் போன்றுதான் தற்போது பெங்களூருவில் கௌரி லங்கேஷ் படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்.
பா.ஜ.க. ஆட்சிக்கு வந்த பின்னர் முற்போக்கு எழுத்தாளர்கள், இடதுசாரி சிந்தனையாளர்கள் மீதான தாக்குதல்கள் நடந்து வருகின்றன. சகிப்பின்மைக்கு எதிராக நாடு முழுவதும் எழுத்தாளர்கள், படைப்பாளிகள் தங்கள் சாகித்ய அகாதமி உள்ளிட்ட அரசின் விருதுகளை திரும்ப ஒப்படைத்தனர். கருத்து உரிமைக்கு எதிராக அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கி உள்ள பேச்சுரிமை, எழுத்து உரிமைக்கு எதிராக இந்துத்துவ மதவெறிக் கும்பல் தொடர்ந்து வன்முறையில் ஈடுபடுவதற்கு மோடி அரசு வழங்கி வரும் ஆதரவுதான் பின்னணி என்பதை நாடு அறியும்.
இந்தியாவின் பன்முகத் தன்மையை சீர்குலைத்து வரும் மதவெறி சக்திகளின் ஆட்டத்திற்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டியது மதச்சார்பற்ற ஜனநாயக முற்போக்கு சக்திகளின் முதன்மையான கடமை என்பதை பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலை உணர்த்துகிறது.
பத்திரிகையாளர் கௌரி லங்கேஷ் படுகொலைக்குக் காரணமானவர்களைக் கண்டறிந்து சட்டத்தின் முன் நிறுத்தி, உரிய தண்டனை வழங்க வேண்டும். படுகொலை செய்யப்பட்ட கௌரி லங்கேஷ் குடும்பத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவிப்பதுடன், அவர் வாழ்நாள் முழுதும் எந்த கொள்கைக்காக அர்ப்பணிப்புடன் செயல்பட்டாரோ அந்த இலட்சியங்களை வென்றெடுக்க உறுதி ஏற்போம்.
இவ்வாறு மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் வைகோ தனது அறிக்கையில் கூறியுள்ளார்.