ஊரடங்கு தளர்வு என்பது மே 3-ஆம் தேதிக்கு பிறகும் ஊரடங்கை நீட்டிக்கப்படுவதற்கு வழி வகுத்துவிடும், எனவே அந்த தவறை மட்டும் செய்யக்கூடாது என பாமக நிறுவனர் இராமதாசு தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது., கொரோனா பாதிப்பு இல்லாத மாவட்டங்களில் ஊரடங்கு தளர்த்தப்படவிருப்பதாகவும், தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறைந்து வருவதாகவும் வெளியாகி வரும் செய்திகள் மக்களிடையே அலட்சிய உணர்வை ஏற்படுத்தியிருப்பதாக தெரிகிறது. சென்னை உட்பட தமிழ்நாட்டின் பெரும்பான்மையான பகுதிகளில் கடந்த இரு நாட்களாக மக்கள் நடமாட்டம் அதிகரித்து வருவது இதைத் தான் காட்டுகிறது.
கொரோனா வைரஸ் நோய்ப்பரவலைக் கட்டுப்படுத்துவதற்காக நாடு முழுவதும் மார்ச் மாதம் 24-ஆம் தேதி நள்ளிரவு முதல் ஏப்ரல் 14-ஆம் தேதி வரை அறிவிக்கப்பட்ட ஊரடங்கு மே மாதம் 3-ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருக்கிறது. ஊரடங்கு அறிவிக்கப்பட்ட காலத்தில் அதை பொருட்படுத்தாமல் அதிக எண்ணிக்கையிலான மக்கள், குறிப்பாக இளைஞர்கள் சாலைகளிலும், சந்தைகள் உள்ளிட்ட பொது இடங்களிலும் நடமாடுவது வாடிக்கையாக இருந்தது. எனினும் ஊடரங்கை மீறி வெளியில் நடமாடுவது கொரோனா வைரஸ் பரவலை அதிகரிக்கும் என்றும், நோய்ப்பரவலைத் தடுக்க பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியில் வரக்கூடாது என்று செய்யப்பட்ட தொடர்பிரச்சாரத்தின் காரணமாகவும், அதையும் மீறி சுற்றியோர் மீது காவல்துறையினர் மேற்கொண்ட கடும் நடவடிக்கைகளின் காரணமாகவும் தேவையின்றி வெளியில் சுற்றுவோரின் எண்ணிக்கை கணிசமாக குறைந்தது. இது ஓரளவுக்கு நிம்மதியளித்தது.
ஆனால், நேற்று முதல் சாலைகளிலும், பொது இடங்களிலும் மக்கள் நடமாட்டம் அதிகரித்திருக்கிறது. ஞாயிற்றுக்கிழமைகளில் இறைச்சி வாங்குவதற்காக சமூக இடைவெளியைக் கூட பின்பற்றாமல் அதிக அளவில் மக்கள் குவிகிறார்கள் என்பதற்காகத் தான் பெரும்பாலான மாவட்டங்களில் இறைச்சிக் கடைகள் மூடப்பட்டன. அதேபோல், கடல்களில் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டிருப்பதால் நகர்ப்புறங்களில் மீன் வணிகம் குறைந்துவிட்டது. ஆனால், கிராமப்புறங்களில் இவை கிடைப்பதையறிந்து அங்கு கூட்டம், கூட்டமாக மக்கள் சென்று வந்ததைக் காண முடிந்தது. மக்களின் உணவுத் தேடலை குறை கூற முடியாது. ஆனால், அத்தகையத் தேடலின் போது சமூக இடைவெளி விதிகளை சற்றும் மதிக்காமல் ஒருவரை ஒருவர் நெருக்கிக் கொண்டு கூடியது தான் பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது. உணவுக்காக இறைச்சி, மீன்களை வாங்கச் சென்றவர்கள் கொரோனாவையும் வாங்கி வந்துவிடக் கூடாது என்பதே எனது கவலை.
அதேபோல், சாலைகளிலும் பொதுமக்கள் எந்தவிதமான குற்ற உணர்ச்சியும், பொறுப்புணர்வும் இல்லாமல் நடமாடுகின்றனர். அவர்களில் பலர் முகக்கவசம் கூட அணிவதில்லை. மக்கள் நடமாட்டம் திடீரென அதிகரித்திருப்பது குறித்து விசாரித்த போது தான், இன்று முதல் சில இடங்களில் நடைமுறைக்கு வரும் ஊரடங்கு தளர்வு தங்கள் பகுதிக்கும் பொருந்தும் என்ற தவறான எண்ணத்தில் கட்டுப்பாடுகளை தகர்த்துக் கொண்டு மக்கள் நடமாடத் தொடங்கியிருப்பதை அறிய முடிந்தது. இது மிகவும் ஆபத்தானது.
ஊரடங்கு தளர்வு என்பது கொரோனா கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளுக்கு மட்டும் தான் பொருந்தும். தமிழகத்தைப் பொருத்தவரை எந்த மாவட்டங்களிலும் ஊரடங்கை தளர்த்துவது குறித்து தமிழ்நாடு அரசு இதுவரை எந்த முடிவையும் அறிவிக்கவில்லை. இன்றைய நிலையில் தமிழகத்தின் 23 மாவட்டங்கள் தீவிரமாக கொரோனா பாதித்த சிவப்பு ஹாட்ஸ்பாட் பகுதிகளாகவே உள்ளன. மேலும் 9 மாவட்டங்களிலும் கொரோனா பரவல் குறிப்பிடத்தக்க அளவில் உள்ளன. ஆகவே, இந்த மாவட்டங்களில் ஊரடங்கை தளத்துவதற்கான வாய்ப்புகளே இல்லை. மற்ற மாவட்டங்களில் சில தளர்வுகள் இருந்தாலும் கூட பொதுமக்கள் எந்தவித கட்டுப்பாடுமின்றி சாலைகளில் நடமாட நிச்சயமாக அரசு அனுமதி அளிக்காது.
ஊரடங்கின் காரணமாக தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் கட்டுப்படுத்தப்பட்டிருப்பது உண்மை தான். ஆனாலும், ஆபத்து இன்னும் முழுமையாக விலகிவிடவில்லை. அது நீறுபூத்த நெருப்பாகவே உள்ளுக்குள் கணன்று கொண்டே இருக்கிறது. கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட அனைவரையும் சோதனை மூலம் அடையாளம் கண்டு அவர்களுக்கு மருத்துவம் அளிப்பதன் மூலம் தான் கொரோனா வைரசை முற்றிலுமாக ஒழிக்க முடியும். அப்போது தான் மக்கள் அச்சமின்றி வெளியில் நடமாட முடியும்.
அதற்கு முன் மக்கள் தாங்களாகவே தடைகளை உடைத்துக் கொண்டு நடமாடத் தொடங்கினால், அடங்கிக் கிடக்கும் கொரோனா வைரஸ் உங்களைத் தொற்றிக் கொள்ளக்கூடும். தமிழ்நாட்டில் குறைந்து வந்த கொரோனா தொற்று எண்ணிக்கை நேற்று அதிகரித்துள்ளது. நேற்று ஒரே நாளில் சென்னையில் 50 பேர் உட்பட 105 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. இதே நிலை நீடித்தால் தமிழ்நாடு முழுவதற்கும் ஊரடங்கு ஆணை மேலும் சில வாரங்களுக்கு நீட்டிக்கப்படலாம். அது நமக்கு உளவியல் ரீதியாகவும், பொருளியல் அடிப்படையிலும் கூடுதலான பாதிப்புகளை ஏற்படுத்தக் கூடும். எனவே, வெண்ணெய் திரண்டு வரும் நேரத்தில் தாழியை உடைக்கும் செயல்களில் ஈடுபடக்கூடாது.
தமிழ்நாட்டில் ஊரடங்கு ஆணை இன்னும் இரு வாரங்களுக்கு நடைமுறையில் இருக்கும். அதுவரை அனைவரும் ஏற்கனவே இருந்ததை விட கூடுதல் கட்டுப்பாட்டுடன் இருந்து கொரோனா வைரசை முற்றிலுமாக ஒழிப்பதற்கான அரசின் நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். காவல்துறையினரும் இதுவரை காட்டிய கண்டிப்பை விட இரு மடங்கு கூடுதல் கண்டிப்பை காட்டி மக்கள் வெளியில் நடமாடுவதை தடுக்க வேண்டும். இவற்றை செய்யத் தவறினால் மே 3-ஆம் தேதிக்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படுவதற்கு நாமே காரணமாகி விடுவோம். அந்தத் தவறை செய்யக்கூடாது என குறிப்பிட்டுள்ளார்.