முல்லைபெரியாறில் புதிய அணைக்கு அனுமதி - பாமக கண்டனம்!

முல்லைப்பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள கேரள அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்திருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது என பாமக இளைஞரணித் தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

Last Updated : Oct 24, 2018, 12:36 PM IST
முல்லைபெரியாறில் புதிய அணைக்கு அனுமதி - பாமக கண்டனம்! title=

முல்லைப்பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள கேரள அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்திருப்பது மிகவும் அதிர்ச்சியளிக்கிறது என பாமக இளைஞரணித் தலைவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக இன்று அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது...

"முல்லைப்பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள கேரள அரசுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை அனுமதி அளித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. நதிநீர்  சிக்கல்களில் தொடர்ந்து தமிழகத்திற்கு எதிரான நிலைப்பாட்டை மத்திய அரசு மேற்கொள்வது கண்டிக்கத்தக்கது.

முல்லைப் பெரியாற்றின் குறுக்கே இப்போதுள்ள 123 ஆண்டுகள் பழமையான அணைக்கு மாற்றாக புதிய அணையைக் கட்டவும், நீர் மின் திட்டங்களைச் செயல்படுத்தவும் ஆய்வுகளை மேற்கொள்வதற்கு அனுமதி அளிக்க வேண்டும் என்று மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் வல்லுனர் மதிப்பீட்டுக் குழுவிடம் கடந்த செப்டம்பர் 25-ஆம் தேதி கேரள அரசு விண்ணப்பம் செய்திருந்தது. அதை ஆய்வு செய்ய மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகக் குழு, சில நிபந்தனைகளுக்குட்பட்டு புதிய முல்லைப்பெரியாறு அணையை கட்டுவதற்கான முதல்கட்ட ஆய்வுகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இதற்காக மத்திய அரசு கூறியுள்ள காரணங்கள் எதையும் ஏற்றுக்கொள்ள முடியாது.

எந்த ஒரு புதியத் திட்டத்தை செயல்படுத்துவதாக இருந்தாலும் அதற்காக சில தகவல்களை திரட்டுவதும், சில ஆய்வுகளை மேற்கொள்வதும் அடிப்படைத் தேவை ஆகும். அவற்றைத் திரட்டுவதற்காக அனுமதி கோரப்படும் போது அதை மறுக்க முடியாது என்பதால் தான் முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டிருப்பதாக மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. அதுமட்டுமின்றி, புதிய அணை கட்டுவதற்கான ஆய்வுகள் அனைத்தும் உச்சநீதிமன்றம் மற்றும் தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் குறுக்கீட்டுக்கு உட்பட்டவை என்றும், இந்த விஷயத்தில் தமிழக அரசின் ஒப்புதலைப் பெறாமல் கேரள அரசு எதையும் செய்ய முடியாது என்றும் நிபந்தனைகள் விதிக்கப்பட்டிருப்பதாகவும் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.

மத்திய சுற்றுச்சூழல் துறை விதித்துள்ள நிபந்தனைகள் வழக்கமானவை. இத்தகைய நிபந்தனைகளுடன் கூட, புதிய அணை பற்றி ஆய்வு செய்ய அனுமதி அளிக்கப்பட வேண்டிய அவசியம் என்ன? என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சி எழுப்பும் வினா ஆகும். 2014-ஆம் ஆண்டு மே மாதம் 7-ஆம் தேதி உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில் முல்லைப் பெரியாறு அணை மிகவும் வலிமையாக இருப்பதாகவும், அங்கு புதிய அணை கட்டவேண்டிய தேவையே இல்லை என்றும் கூறியிருக்கிறது. அதுமட்டுமின்றி, அணையின் நீர்மட்டத்தை 152 அடியாக உயர்த்துவது உள்ளிட்ட முடிவுகளை எடுக்க உச்சநீதிமன்ற ஆணைப்படி வல்லுனர் குழுவும் அமைக்கப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்ட வேண்டிய தேவையே இல்லை எனும் போது, அதற்கான ஆய்வுகளை மேற்கொள்ள வேண்டிய தேவை எங்கிருந்து வந்தது? என்ற வினாவுக்கு மத்திய சுற்றுச்சூழல் துறை விடையளிக்க வேண்டும்.

அதுமட்டுமின்றி, முல்லைப் பெரியாறு அணை வலிமையாக இருப்பதாக உச்சநீதிமன்றம் கூறியுள்ள நிலையில், மத்திய அரசிடம் கேரள அரசு தாக்கல் செய்துள்ள மனுவில், முல்லைப் பெரியாறு அணை அதன் பாதுகாப்பான வாழ்நாளை கடந்து விட்டதாகவும், இப்போது அணை வலுவிழந்து விட்டதாகவும் கூறப்பட்டிருக்கிறது. இது முற்றிலும் தவறான தகவல் ஆகும். முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணை தேவையில்லை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ள நிலையில், அதற்கு முரணான வகையில் ஆய்வுக்கு அனுமதி அளித்ததன் மூலம் மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் நீதிமன்றத்தை அவமதித்துள்ளது. அதேபோல், அணை வலிமையாக இருப்பதாக உச்சநீதிமன்றம் கூறிவிட்ட நிலையில் அது வலுவிழந்து விட்டதாக மத்திய அரசிடம் கேரள அரசு கூறியிருப்பதும் உச்சநீதிமன்றத்தை அவமதிக்கும் செயலாகும்.

முல்லைப் பெரியாற்று வழக்கில் உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்த பின்னர், அதை மதிக்காமல் புதிய அணை கட்ட கேரள அரசு பலமுறை முயன்றது. சில நேரங்களில் சட்டவிரோதமாக ஆய்வுப் பணிகளையும் மேற்கொண்டது. அப்போதெல்லாம் தமிழக அரசு உறுதியான நடவடிக்கைகளை எடுக்கத் தவறியதன் விளைவு தான் இப்போது புதிய அணைக்காக ஆய்வு நடத்த மத்திய அரசிடம் அனுமதி பெறும்  அளவுக்கு கேரள அரசு தொடர் நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்கிறது. மத்திய அரசு இத்தகைய அனுமதியை அளித்திருப்பதன் மூலம் இரு மாநிலங்களுக்கு இடையே தேவையற்ற பதற்றம் ஏற்படும் ஆபத்துள்ளது.

எனவே, முல்லைப் பெரியாற்றின் குறுக்கே புதிய அணை கட்டுவது குறித்த ஆய்வுகளை நடத்த கேரள அரசுக்கு அளித்துள்ள அனுமதியை மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் திரும்பப்பெற வேண்டும்." என குறிப்பிட்டுள்ளார்!

Trending News