சென்னை: அதிகரித்து வரும் கோவிட் -19 தொற்று, அனைவர் மனதிலும் அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் தொற்று அதிவேகமாக பரவிக்கொண்டிருக்கின்றது. பல இடங்களில் பல வித கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், திடீரென முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டால், சென்ற ஆண்டு நேர்ந்த அதே அவல நிலை ஏற்படக்கூடுமோ என்ற அச்சம் புலம்பெயர்ந்த தொழிலாளர்களை வாட்டி வதைக்கிறது.
தமிழகத்தைப் (Tamil Nadu) பொறுத்தவரை தொற்றின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டிருக்கின்றது. எப்போது வேண்டுமானாலும் லாக்டவுன் அறிவிக்கப்படலாம் என்ற நிலை உள்ளது. இந்த நிலையில், ஊரடங்குக்கு பயந்து, தமிழகம் மற்றும் கேரளாவிலிருந்து ஏராளமான புலம்பெயர்ந்த தொழிலாளர்கள், தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல தயாராகி வருகின்றனர். சென்னை செண்டிரல் ரயில் நிலையத்தில் பல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் கூடியுள்ளனர்.
கடந்த ஆண்டு லாக்டவுன் (Lockdown) அறிவிக்கப்பட்ட போது, பல புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் அவரவர் வேலை செய்து கொண்டிருந்த இடங்களில் மாட்டிக்கொண்டனர். தினசரி கூலிகளாக வேலை பார்த்துக்கொண்டிருந்த தொழிலாளர்கள், வேலை இல்லாததால், உணவுக்கு மிகவும் அல்லாட வெண்டியதாயிற்று. மேலும், அவர்கள் தங்கி இருந்த இடங்களுக்காக வாடகையையும் கொடுக்க முடியாமல் மிகுந்த அல்லலுக்கு ஆளானார்கள்.
லாக்டவுன் போடப்பட்டு சில நாட்களுக்குப் பிறகு, புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கான சிறப்பு போக்குவரத்து வசதிகளை அரசாங்கம் செய்து கொடுத்தது. எனினும், பலர் கால்நடையாக தங்கள் ஊர் நோக்கி மேற்கொண்ட பயணங்களை இன்று நினைத்தாலும் நெஞ்சம் பதைக்கிறது.
ALSO READ: மதுப்பிரியர்களின் கவனத்திற்கு, டாஸ்மாக் கடைகளுக்கு புதிய கட்டுப்பாடுகள்!
அந்த நிலை இந்த ஆண்டும் வந்து விடுமோ என அஞ்சும் தொழிலாளர்கள் தங்கள் ஊர்களை நோக்கி செல்லத் தயாராகி வருகிறார்கள்.
"செய்திகளில், பலர் கோவிட் -19 தொற்றால் பாதிக்கப்படுவதைப் பற்றி கேள்விப்படுகிறோம். தொற்று அதிகரித்துக்கொண்டிருக்கின்றது. நாளுக்கு நாள் புதிய கட்டுப்பாடுகள் போடப்படுகின்றன. இந்த நிலையில், மீண்டும் முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டால், எங்கள் நிலைமை மிகவும் மோசமாகி விடும். ஆகையால் இப்போதே எங்கள் ஊர் நோக்கி செல்ல தயாராகி வருகிறோம்" என்றார் செண்டிரல் ரயில் நிலையத்தில் காத்துக்கொண்டிருந்த ஒரு புலம்பெயர்ந்த தொழிலாளி.
இதற்கிடையில், தங்கள் சொந்த ஊர்களுக்கு செல்ல விரும்புபவர்களுக்கு ரயில்கள் போதுமான எண்ணிக்கையில் கிடைக்கின்றன என்று தெற்கு ரயில்வே அதிகாரிகள் உறுதியளித்துள்ளனர்.
கோவிட் -19 (COVID-19) பரவுவதைக் குறைக்க, ஏப்ரல் 20 முதல் தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை அறிவித்துள்ளது. அவற்றில் இரவு 10 மணி முதல் காலை 4 மணி வரை இரவு ஊரடங்கு உத்தரவு மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழுமையான லாக்டவுன் ஆகியவை அடங்கும்.
இதற்கிடையில், தமிழ்நாட்டில் ஞாயிற்றுக்கிழமை 10,273 பேருக்கு புதிதாக கொரோனா தொற்று உறுதியானது. 42 பேர் இறந்த நிலையில், கோவிட் -19 தொற்றுநோயால் இதுவரை இறந்தவர்களின் எண்ணிக்கை 13,113 ஆக அதிகரித்துள்ளது.
ALSO READ: டெல்லியைத் தொடர்ந்து தமிழகத்திலும் ஊரடங்கா? தொற்றின் நிலவரம் எப்படி உள்ளது?
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!
Android Link - https://bit.ly/3hDyh4G
Apple Link - https://apple.co/3loQYeR