Writter RN Joe D Cruz: எழுத்தாளர் ஆர்.என்.ஜோ டி குருஸ் கடலோடியாக வாழ்ந்து வருபவர். இவர் கடந்த 20 ஆண்டுகளுக்கு மேலாகத் தமிழ் இலக்கிய உலகில் மீனவர்களின் வாழ்வியலை அழுத்தமாகப் பதிவு செய்து வருகிறார். தமிழ் இலக்கியத்தில் கடல்சார் வாழ்வியலைப் பதிவு செய்த எழுத்தாளர்களான ப.சிங்காரம், வண்ணநிலவன், ஹெப்சிபா யேசுதாசன், ராஜம் கிருஷ்ணன் போன்ற இன்னும் பிற எழுத்துலக ஆளுமைகளில் இருந்து தனித்துவமாக அடையாளப்படுத்தப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்க ஒன்று. மேலும் சங்க காலம் தொட்டுச் சுமார் 2000 ஆண்டுகளுக்குப் பின்பு கடலோடிச் சமூகத்தில் இருந்து முகிழ்த்த முதல் எழுத்தாளராக ஆர்.என்.ஜோ டி குருஸ் விளங்குகிறார். கடல் நிலப்பரப்பில் வாழும் மீனவர்களின் வாழ்வியலை யதார்த்தத்தோடு இரத்தமும் சதையுமாகப் பதிவு செய்த முதல் எழுத்தாளராகவும் திகழ்கிறார். எழுத்தாளர் ஜோவின் அரசியல்சார் பார்வையில், தான் வாழும் நிலப்பரப்பில் எழுந்த பல்வேறு வினாக்களை உள்வாங்கிக் கொண்டு படைப்பாக்கம் பெற்று வருகிறது என்பது கவனிக்கத்தக்கது. மேலும், இவரது படைப்புகள் பல்வேறு அதிர்வுகளையும், சலசலப்புகளையும், சர்ச்சைகளையும், விவாதங்களையும், வரவேற்புகளையும், எதிர்ப்புகளையும், கேள்விகளையும், உரையாடல்களையும் கடந்து நிற்கின்றன என்றால் அது மிகையில்லை.
ஜோ எழுதிய நான்காவது நாவல் யாத்திரை. கடல்சார் நிலப்பரப்பில் பூர்வக் குடிகளின் தொல் மரபினை இனங்காணும் தேடலின் பெருமுயற்சியே கதையின் மையம்.
யாத்திரை நாவலில் வரக்கூடிய முதன்மை கதைமாந்தர் சிறுவன் வளர்ந்து முதுமை வயதை எட்டிப் பார்க்கும் வரை கதையாடல் நிகழ்கிறது. இந்த இடைப்பட்ட காலத்தில் முதன்மை கதைமாந்தர் பெறும் அனுபவங்கள் பார்வையில் கதையாக விரிகிறது. இக்கதையாடல் நேர்கோட்டுத் தன்மையில் சொல்லப்பட்டுள்ளது. கதையில் வரும் சிறுவன் கிறித்துவ மதபோதகராக வேண்டும் என்ற ஆர்வத்தோடு பயணித்த வாழ்வு, அவனைக் கப்பல் நிறுவனத்தில் பணியமர்த்துகிறது. மேலும், தான் வாழும் கடல்சார் வாழ்வியலைப் பதிவு செய்வதில் தேர்ந்த எழுத்தாளனாகப் பரிணமிக்க நகர்த்துகிறது. அவற்றுடன் வரவேற்புகளையும் எதிர்ப்புகளையும் சந்திக்க வைக்கிறது. இதனிடையே அவனது எழுத்து, சமூகம், குடும்பம், நிறுவனம் ஆகிய நான்கு புள்ளிகள் அளிக்கும் நெருக்கடி சூழலை உள்வாங்கிப் பயணிக்க அவனது வாழ்வு உந்துகிறது.
மேலும் படிக்க: ஹேபர்மாஸ் : ஆய்வுப் போக்கும் நிலைப்பாடும் - இரா.முரளி
அவனது கப்பல் நிறுவனத்தில் விபத்து ஒன்று நேர்கிறது. அதில் காயமடைந்த இளைஞனைக் காண மருத்துவமனைக்குச் செல்கிறான். அப்போது அந்த இளைஞனின் வாசிப்பு அனுபவத்தில் இருந்து, ’மீனவச் சமூக இளைஞர்களின் விழிப்புக்காக நமது வாழ்வு படைப்பாகப் பதிவு செய்ய வேண்டும்’ என்ற கோரிக்கை முன்வைப்பான். அச்சமயம் அவனுக்குள் இருக்கும் படைப்பாளி முகம் தட்டி எழுப்படுகிறது. அதே வீரியத்தன்மையோடு தமிழ் எழுத்துலகில் நுழைய முற்படுகிறான். அங்கு அவனுக்கு ஏற்பட்ட அவமானங்கள் எண்ணில் அடங்காதவை. எழுத்தால் வரவேற்புகளும் எதிர்ப்புகளும் ஒருங்கே கிடைக்கின்றன. ஒரு சூழலில் எழுதுவதை நிறுத்திக் கொள்ள முயன்றான். ஆனால் அது முடியாது. அந்த எழுத்து அவனுள் இரத்தமும் சதையுமாகிப்போனது. இதனை மீண்டும் எழுத உந்தப்படும் சூழலில்தான் உணர்கிறான்.
அவன் தொடர்ந்து கடல்சார் நாட்டார் வழக்கியல், தொல் மரபுகளின் வேர்களைத் தேடி அலைகிறான். தான் சார்ந்த வாழ்வியல் நிலப் பரப்பின் அடிநாதத்தைப் புரிந்துகொள்வதில் பல்வேறு தருணங்களில் குழப்பமான மனநிலைக்கு ஆட்படுகிறான். அக்குழப்பத்தைத் தெளிவுபடுத்திக் கொண்டு பயணிக்க இயற்கையிடம் வினா, விடை முறையில் பல புரிதலுடனான விளக்கங்களைப் பெறுகிறான். அவனது வாழ்வு இறுதிவரை தொன்மையை விடாமல் துரத்திச் செல்வதை உணர்கிறான்.
மேலும் படிக்க: மான்டேஜ் மனசு - 'காதல் சூழ் உலகு'... திரைக் காதலை காட்டும் சுவாரஸ்யமான புத்தகம்
யாத்திரையை வாசிக்கும் வாசகனுக்கு முதன்மை கதைமாந்தராக வரும் சிறுவன் எழுத்தாளர் ஜோவாக இருக்கலாமோ? என்னும் வினா எழலாம். அவரது எழுத்தைத் தொடர்ந்து வாசிப்பவர்களுக்கு யாத்திரை பிரதி ஜோவின் தன் வரலாறாகவோ தன்னிலை விளக்கமாகவோ உள்வாங்க வாய்ப்பு உண்டு. மேலும், எழுத்தாளனின் குறுக்கீடு வாசிப்புச் சுதந்திரத்தைத் தடை செய்து விடுமோ? என்ற அச்ச உணர்வு எழும் அளவிற்கு எழுத்தாளரின் குறுக்கீடு அதீதமாக உள்ளது. நாவலின் பின்னிணைப்பில் வட்டார வழக்குச் சொல்லகராதி இணைக்கப்பட்டுள்ளது ஆறுதலை அளிக்கக் கூடும். ஆனால், கதையில் பயன்படுத்தப்படும் அதிகமான வட்டார வழக்குச் சொல்லாட்சி இன்னும் ஏராளமான சொற்களின் விளக்கத்தை எழுத்தாளரிடம் கோரி நிற்கின்றன.
முதன்மை கதைமாந்தரின் பெயரைக் கதையோ கதைசொல்லியோ அறிவிக்காததால் அவன் என்னும் சொல்லுக்கு எழுத்தாளர் கைதியாக வாய்ப்பு நேர்ந்துள்ளது. ஆழி சூழ் உலகு, கொற்கை, அஸ்தினாபுரம், யாத்திரை ஆகிய நான்கு நாவல்களில் மிக மிகக் குறைந்த பக்கங்களைக் கொண்டது என்கின்ற பெருமையை யாத்திரை நாவல் பெறுகிறது. மேலும், வாசகனின் வாசிப்பு ஓட்டத்தை விரைவுபடுத்தும் கதைக்களத்தை ‘யாத்திரை’ கொடுத்திருப்பது வரவேற்கத்தக்க அம்சங்களில் ஒன்று.
மேலும் படிக்க: நடிப்பாற்றலின் உச்சம் சங்கரதாஸ் சுவாமிகள் : நாடகவியலாளர் கி.பார்த்திபராஜா
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.
முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.
கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ