போராட்டகளமாக மாறும் வெனிசுலா; அமைதி காக்கும் ஜூவான் கெய்டோ!

வெனிசுலாவில் நிகழ்ந்து வரும் அரசியல் கலவரங்கள் கடந்த ஒருவார காலமாக, அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

Last Updated : Jan 25, 2019, 12:24 PM IST
போராட்டகளமாக மாறும் வெனிசுலா; அமைதி காக்கும் ஜூவான் கெய்டோ! title=

வெனிசுலாவில் நிகழ்ந்து வரும் அரசியல் கலவரங்கள் கடந்த ஒருவார காலமாக, அதிகரித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது!

வெனிசுலாவில் கடந்த சில வருடங்களாகவே அதிபர் மதுராவுக்கு எதிராக போராட்டங்கள் நடைப்பெற்று வருகின்றன. அவரது அரசுக்கு எதிராக கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் கடுமையான கிளர்ச்சி ஏற்பட்டது. இந்த கிளர்ச்சியில் 100-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். 

இதனையடுத்து அந்நாட்டில் நடைபெற்ற தேர்தலில் நிகோலஸ் மதுரோ 67% வாக்குகள் பெற்று வெற்றி பெற்று, பதவியை தக்க வைத்துக்கொண்டார். நிகோலஸ் மதுரோவை எதிர்த்து போட்டியிட்ட எதிர்க்கட்சி வேட்பாளர் ஹென்றி பால்கோன் 21.2% சதவீத வாக்குகளே பெற்றார்.

நிகோலஸ் மதுரோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதை ஏற்க மறுத்த எதிர்க்கட்சியினர், இத்தேர்தலில் முறைகேடு நடந்திருப்பதாக குற்றம் சாட்டினர். மேலும் மறு தேர்தல் நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தினர். அதேவேலையில் பாராளுமன்றத்தில் முழுவதுமாக ஆதிக்கம் செலுத்தி வரும் எதிர்க்கட்சியினர், நிகோலஸ் மதுரோ அதிபர் பதவி ஏற்பதற்கு கடும் ஆட்சேபனை தெரிவித்தனர். எனினும், கடந்த 10-ஆம் நாள் உச்சநீதிமன்றம் முன்னிலையில் நிகோலஸ் மதுரோ 2-வது முறையாக அந்நாட்டின் அதிபராக பதவி ஏற்றுக்கொண்டார்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து எதிர்க்கட்சிகள் தொடர் போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். மேலும் புதிய தேர்தலை நடத்த வேண்டும் எனவும் வலியுறுத்தி வருகின்றனர்.

இதற்கிடையில் பாராளுமன்ற சபாநாயகரான ஜூவான் கெய்டோ(வயது 35), தான் அதிபர் ஆவதற்கு தயாராகி வருவதாக அறிவித்தார். ஒரு கட்டத்தில் அவரை பாதுகாப்பு படை வீரர்கள் கைது செய்து, பின்னர் விடுவித்தனர். இந்த விவகாரம் சர்வதேச நாடுகளின் கவனத்தை ஈர்த்தது. ஜூவான் கெய்டா கைது செய்யப்பட்டதற்கு அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் கண்டனம் தெரிவித்தன. 

இந்நிலையில், வெனிசுலா தலைநகர் கராகசில் கடந்த 23-ஆம் நாள் எதிர்க்கட்சி சார்பில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்றது. இக்கூட்டத்தில் பங்கேற்ற ஜூவான் கெய்டோ, தன்னை நாட்டின் தற்காலிக அதிபராக பிரகடனம் செய்துக்கொண்டார்.

பாராளுமன்றத்தை எதிர்க்கட்சிகள் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் நிலையிலும். இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றம் விசாரணைக்கு உத்தரவிட்ட நிலையிலும், சபாநாயகர் தனது அறிவிப்பை அதிரடியாக வெளியிட்டுள்ளார். 

இதனால் அதிபர் நிகோலஸ் மதுரோ கடும் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளார். இந்த அரசியல் மாற்றம் வெனிசுலாவில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது மட்டும் அல்லாமல் நாட்டையே போராட்ட களமாக மாற்றியுள்ளது.

Trending News