மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது!!
நாடு முழுவதும் உள்ள மொத்தம் 543 பாராளுமன்ற தொகுதிகளில் வேலூர் தொகுதியை தவிர்த்து 542 தொகுதிக்கு தேர்தல் நடைபெற்றது. ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநிலங்களில் சட்டசபை தேர்தலும், தமிழகம், புதுச்சேரி உட்பட சில மாநிலங்களில் சட்டசபை இடைத்தேர்தலும் நடந்து முடிந்துள்ளது. இந்த தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை எட்டு மணியளவில் தொடங்கி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.
தமிழகத்தை பொருத்த வரை வேலூர் தொகுயை தவிர மற்ற 38 மக்களவை தொகுதிக்கும், 22 சட்டசபை தொகுதிக்கும் நடைபெற்ற தேர்தல் முடிவுகள் இன்று அறிவிக்கப்பட உள்ளது. இந்நிலையில், மகாராஷ்டிராவில் பாஜக - சிவசேனா கூட்டணி தொடர்ந்து முன்னிலை வகிக்கிறது.
மகாராஷ்டிராவில் மொத்தம் உள்ள 48 தொகுதிகளில் பாஜக - சிவசேனா கட்சிகள் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதேபோல் காங்கிரஸ் - தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அமைத்து போட்டியிட்டன. இதில் 43 இடங்களில் பாஜக கூட்டணி முன்னிலையில் உள்ளது. காங்கிரஸ் கூட்டணி வெறும் 4 இடங்களில் மட்டுமே முன்னிலை வகிக்கிறது. அங்குள்ள நாக்பூர் தொகுதியில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் நிதின் கட்கரி, துலே தொகுதியில் போட்டியிட்ட மத்திய அமைச்சர் சுபாஷ் பாம்ரா ஆகியோர் தொடர்ந்து முன்னிலை வகிக்கின்றனர். இதே போல் குஜராத்தில் பாஜக 4 தொகுதிகளிலும், காங்கிரஸ் 1 தொகுதியிலும் முன்னிலை வகிக்கின்றன. அங்குள்ள காந்திநகர் தொகுதியில் போட்டியிட்ட அமித்ஷா சுமார் 1 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை வகிக்கிறார்.