சிபிஐ இயக்குனர் ஆலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தனா இடையே லஞ்சப்புகார் தொடர்பாக மோதல் வெடித்தது. ஆரம்பத்தில் இருந்தே ஆலோக் வர்மா மற்றும் ராகேஷ் அஸ்தனா இடையே கருத்து வேறுபாடு நிலவி வந்தது. இந்த மோதல் குரேஷி வழக்கில் உச்சக்கட்டத்தை எட்டிய நிலையில் ராகேஷ் அஸ்தனாவுக்கு இறைச்சி ஏற்றுமதியாளர் மூன்று கோடி ரூபாய் லஞ்சம் கொடுத்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. லஞ்சப் பணத்தை கைமாற்றியதாக அண்மையில் மனோஜ் பிரசாத் என்ற தரகரை அண்மையில் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். இதையடுத்து ராகேஷ்குமார் மற்றும் CBI டிஎஸ்பி தேவேந்திர குமார் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. தேவேந்திரகுமாரும் கைது செய்யப்பட்டார்.
இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிட்டு சிபிஐ இயக்குனர் ஆலோக் வர்மா, சிறப்பு இயக்குனர் ராகேஷ் அஸ்தனா இருவரையும் அழைத்துப் பேசினார். அதன் பிறகு இருவரையும் கட்டாய விடுப்பில் அனுப்பியது மத்திய அரசு. பின்னர் கடந்த 23 ஆம் நாள் நள்ளிரவு 2 மணியளவில் சிபிஐ-யின் புதிய இயக்குனராக நாகேஸ்வரராவை நியமித்தது மத்திய அரசு.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்த காங்கிரஸ் தலைவர், இத்தகைய செயல் நாட்டு மக்களை அவமதிக்கும் செயலாக தெரிகிறது. ரபேல் விவகாரத்தை மக்கள் மனத்தில் இருந்து மறைக்க இந்த முயற்சி நடந்துள்ளது. ஆதாரத்தை அழிக்க அரசு முயன்றுவருகிறது, பிரதமரின் ஊழல் விவகாரங்கள் வெளியே வந்துவிடும் என அவர் அஞ்சுகின்றார் என ராகுல்காந்தி கூறினார்
இந்நிலையில், இன்று காங்கிரஸ் கட்சியின் மக்களவை தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் பிரதமர், எதிர்க்கட்சி தலைவர் மற்றும் இந்திய தலைமை நீதிபதி ஆகிய 3 பேர் கொண்ட குழு தான் சிபிஐ இயக்குநரை நியமனம் செய்யவோ அல்லது நீக்கம் செய்யவோ முடியும் என தெரிவித்துள்ளார். மத்திய கண்காணிப்பு ஆணையம் நடவடிக்கை எடுப்பதற்கு எந்த அதிகாரமும் கிடையாது.
ஆனால் பிரதமர் தன்னிச்சையாக சிபிஐ இயக்குநரை அலோக் வர்மாவை விடுமுறையில் அனுப்பியது சட்டவிரோத செயல் ஆகும். இது சிபிஐ சட்டத்தின்படி விதிமீறல் செயலாகும் என மனுவில் கூறியுள்ளார்.
முன்னதாக பிரதமர் மோடிக்கு மக்களவை எதிர்க்கட்சித் தலைவரான மல்லிகார்ஜூன் கார்கே CBI இயக்குனர்கள் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டதற்கு ஆட்சேபம் தெரிவித்து கடிதம் எழுதினார். அதில், CBI இயக்குனர் விவகாரத்தில் தலையிட பிரதமருக்கும் மத்திய கண்காணிப்பு ஆணையத்திற்கும் அதிகாரம் இல்லை என்று மல்லிகார்ஜூன கார்கே கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.