Manipur: மீண்டும் பெட்ரோல் குண்டுவீச்சு! 20 நாட்களில் 4 அமைச்சர்கள்-எம்எல்ஏக்கள் வீட்டுக்கு தீ வைப்பு

Union Minister House Set On Fire In Manipur: மணிப்பூரில் வெளியுறவுத் துறை இணை அமைச்சரின் வீட்டிற்கு தீ வைத்த கும்பல். சுமார் 50 பேர் பெட்ரோல் குண்டுகளை வீசினர். 20 நாட்களில் 4 அமைச்சர்கள்-எம்எல்ஏக்கள் வீடு தாக்கப்பட்டது. 

Written by - Shiva Murugesan | Last Updated : Jun 16, 2023, 04:53 PM IST
  • மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சர்ர ராஜ்குமார் ரஞ்சன் சிங்கின் வீட்டின் மீது பெட்ரோல் குண்டு வீசு.
  • கடந்த 20 நாட்களில் அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட 4வது சம்பவம் இது.
  • மணிப்பூர்ர வன்முறையில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் மற்றும் 320 பேர் காயமடைந்துள்ளனர்.
Manipur: மீண்டும் பெட்ரோல் குண்டுவீச்சு! 20 நாட்களில் 4 அமைச்சர்கள்-எம்எல்ஏக்கள் வீட்டுக்கு தீ வைப்பு title=

Manipur News in Tamil: மணிப்பூரில் மே 3 ஆம் தேதி முதல் குகி மற்றும் மைதேயி சமூகத்தினரிடையே இடஒதுக்கீடு தொடர்பாக சாதி வன்முறை நடந்து வருகிறது. இந்த வன்முறை காரணமாக இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். நேற்று (ஜூன் 15, வியாழக்கிழமை) இரவு மீண்டும் வன்முறை ஏற்பட்டது.

மணிப்பூர் இம்பாலில் உள்ள பாஜக எம்பியும், மத்திய வெளியுறவுத்துறை இணை அமைச்சருமான ராஜ்குமார் ரஞ்சன் சிங்கின் வீட்டின் மீது சில போராட்டக்காரர்கள்  பெட்ரோல் குண்டு வீசியுள்ளனர். அவரது வீட்டுக்கு தீ வைக்கப்பட்டது. இந்த சம்பவத்தின் போது அமைச்சர் வீட்டில் இல்லை, கேரளாவில் இருந்தார். மேலும் அமைச்சர் ராஜ்குமார் ரஞ்சன் மைதேயி சமூகத்தைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்த சம்பவம் குறித்து ராஜ்குமார் ரஞ்சன் சிங் கூறுகையில், நேற்று இரவு நடந்ததை பார்க்க மிகவும் வருத்தமாக இருந்தது. இரவு 10 மணியளவில் எனது வீட்டை 50க்கும் மேற்பட்டோர் தாக்கியதாக கூறப்படுகிறது. மாநிலத்தில் நடந்து வரும் வன்முறை சம்பவங்களால் நான் மிகவும் கவலை அடைந்துள்ளேன். மணிப்பூரில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் தோல்வியடைந்துள்ளது என்றார்.

மேலும் படிக்க - அமித் ஷா எச்சரிக்கையை அடுத்து, ஆயுதங்களுடன் சரணடைந்த வன்முறையாளர்கள்! ஊரடங்கு உத்தரவு தளர்வு

அமைச்சர்கள்-எம்எல்ஏக்களின் வீடுகள் தாக்கப்பட்ட விவரம்:
கடந்த 20 நாட்களில் மணிப்பூர் மாநிலத்தில் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் வீடுகள் மீது தாக்குதல் நடத்தப்பட்ட நான்காவது சம்பவம் இதுவாகும்.

முன்னதாக ஜூன் 14 அன்று, இம்பாலின் லாம்பேல் பகுதியில் உள்ள தொழில்துறை அமைச்சர் நெம்சா கிப்ஜெனின் அதிகாரப்பூர்வ பங்களா தீ வைத்து எரிக்கப்பட்டது. அப்போது கிப்ஜென் வீட்டில் இல்லை.

ஜூன் 8 ஆம் தேதி பாஜக எம்எல்ஏ சொரைசம் கேபி வீட்டில் ஐஇடி தாக்குதல் நடத்தப்பட்டது. பைக்கில் வந்த இருவர், வீட்டில் ஐஇடி வெடிகுண்டை வீசினர்.

மே 28 அன்று காங்கிரஸ் எம்எல்ஏ ரஞ்சித் சிங்கின் வீடும் தாக்கப்பட்டது. சிலர் செரோ கிராமத்தில் உள்ள எம்எல்ஏ ரஞ்சித்தின் வீட்டை அடித்து நொறுக்கினர்.

மியான்மரில் இருந்து 300 ஆயுததாரிகள் மணிப்பூருக்குள் நுழைந்தனர்:
மியான்மரில் இருந்து சுமார் 300 ஆயுததாரிகள் அம்மாநிலத்தின் பிஷ்னுபூர் மாவட்டத்திற்குள் நுழைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. ஆதாரங்களின்படி, டோர்பங் காடுகளில் ஒரு தளத்தை உருவாக்கி, இந்த வன்முறைக் குழு சுராசந்த்பூரை நோக்கி நகர்கிறது. இவற்றில் சின் மற்றும் குகி சமூகத்தை சேர்ந்த சில இருக்கிறார்கள் என்று கூறப்படுகிறது. அவர்களைக் கண்டுபிடிக்க பாதுகாப்பு அமைப்புகள் ட்ரோன்களைப் பயன்படுத்தி வருகிறது. இதற்கிடையில், வியாழன் (ஜூன் 15) மதியம் பிஷ்னுபூர் மாவட்டத்தில் உள்ள ட்ரோங்லாபியில் போலீஸ் வாகனம் மீது குகி சமூகத்தை சேர்ந்த வன்முறையாளர்கள் கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டனர். அதில் ஒரு போலீஸ் கமாண்டோ வீரமரணம் அடைந்தார். மேலும் இரண்டு போலீசார் படுகாயமடைந்தனர். இதற்கிடையில், மாநிலத்தில் மொபைல் இன்டர்நெட் தடை ஜூன் 20 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

மேலும் படிக்க - மணிப்பூர் வன்முறை முடிவுக்கு வரவில்லை என்றால் பதக்கத்தை திருப்பி தருவோம் 11 வீரர்கள் கடிதம்

பாஜகவின் வெறுப்பு அரசியலால் மணிப்பூர் பற்றி எரிகிறது -ராகுல்
மணிப்பூர் வன்முறை குறித்து காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நேற்று (ஜூன் 15, வியாழக்கிழமை) ட்வீட் செய்தார். அதில், "பாஜகவின் வெறுப்பு அரசியலால் மணிப்பூரை 40 நாட்களுக்கும் மேலாக வன்முறைத் தீயில் எரிய வைத்துள்ளது. இதில் நூற்றுக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். ஆனால் பிரதமர் அமைதியாக இருக்கிறார். வன்முறையை முடிவுக்குக் கொண்டு வந்து அமைதியை நிலைநாட்ட அனைத்துக் கட்சிக் குழுவை மாநிலத்துக்கு அனுப்ப வேண்டும். இந்த வெறுப்பின் கடையை சாத்திவிட்டு மணிப்பூரில் உள்ள ஒவ்வொரு இதயத்திலும் 'அன்பின் கடையை' திறப்போம் எனப் பதிவிட்டுள்ளார்.

ஐந்நூறுக்கும் மேற்பட்ட சிவில் சமூகம் அறிக்கை வெளியிட்டது:
மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷன், மணிப்பூரில் நடந்து வரும் வன்முறைகள் குறித்து சமூக ஊடகங்களில் சிவில் சமூகத்தின் இரண்டு பக்க அறிக்கையை வெள்ளிக்கிழமை வெளியிட்டார். அதில், "வன்முறை குறித்து பிரதமர் பேச வேண்டும், அதற்கு பொறுப்பேற்க வேண்டும். வன்முறை சம்பவத்தை விசாரிக்கவும், பொறுப்பை நிர்ணயிக்கவும் நீதிமன்றத்தின் மேற்பார்வையில் நடுவர் மன்றம் அமைக்கப்பட வேண்டும். மக்களுக்கு நீதி வழங்க விரைவு நீதிமன்றங்கள் அமைக்கப்பட வேண்டும். நிவாரணப் பணிகளை விரைவுபடுத்த வேண்டும். மணிப்பூரில் தொடரும் வன்முறைக்கு கண்டனம் தெரிவித்ததோடு, மாநிலத்தில் "பிளவு அரசியலை" கைவிட வேண்டும் என்று கோரிக்கை வைத்து சுமார் 500 அமைப்புகள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர்.

மேலும் படிக்க - பற்றி எரியும் மணிப்பூர்.... மெய்ட்டி - குகி - நாகா சமூகங்கள் மோதிக் கொள்வது ஏன்!

கவர்னர் தலைமையில் அமைதிக் குழுவை அமைத்த மத்திய அரசு:
மணிப்பூரில் அமைதியை நிலைநாட்ட கவர்னர் தலைமையில் ஒரு குழுவை கடந்த ஜூன் 10ம் தேதி மத்திய அரசு அமைத்தது. இந்தக் குழுவில் முதல்வர், மாநில அரசின் சில அமைச்சர்கள், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள், சமூக பிரதிநிதிகள், கலைஞர்கள் உள்ளிட்டோர் இடம் பெற்றுள்ளனர். இவர்களில் சில கலைஞர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் அமைதிக் குழுவில் இருந்து விலகத் தொடங்கியுள்ளனர். பிரபல நாடகக் கலைஞர் ரத்தன் தியாமுக்குப் பிறகு, மணிப்பூரின் பிரபல நடிகரும் இயக்குநருமான மகோன்மணி மோங்சபாவும் அமைதிக் குழுவில் இருந்து விலகியுள்ளார்.

வன்முறையில் இதுவரை 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்:
மணிப்பூரில் கடந்த மே 3 ஆம் தேதி முதல் நடைபெற்று வரும் வன்முறையில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். 320 பேர் காயமடைந்துள்ளனர் மற்றும் 47 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் 272 நிவாரண முகாம்களில் வசிக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். மேலும் ஜூன் 10 ஆம் தேதி மாநிலத்தைச் சேர்ந்த 11 அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டனர். இவர்களில் ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகளும் அடங்குவார்கள்.

4 நாள் மணிப்பூரில் தங்கிய உள்துறை அமைச்சர் அமித்ஷா:
முன்னதாக, உள்துறை அமைச்சர் அமித்ஷா மணிப்பூர் தலைநகர் இம்பாலுக்கு மே 29 அன்று சென்றடைந்தார். ஜூன் 1 ஆம் தேதி வரை அங்கேயே முகாமிட்டு மாநிலத்தில் அமைதியை நிலைநாட்ட பேச்சுவாரத்தை மற்றும் நடவடிக்கைகளை மேற்கொண்டார். மேலும் அம்மாநில டிஜிபி பி.டோங்கல் நீக்கப்பட்டார். அவருக்குப் பதிலாக ராஜீவ் சிங் தலைமைப் பொறுப்பை ஏற்றுள்ளார்.

மேலும் படிக்க - Manipur Violence: பற்றி எரியும் மணிப்பூரைக் காப்பாற்றுங்கள்! பிரதமருக்கு கோரிக்கை

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News