உலக வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிதி அதிகாரியாக இந்தியாவைச் சேர்ந்த அன்ஷுலா காந்த் நியமனம்!!
உலக நாடுகளின் வளர்ச்சிக்கு, கடன் உதவி அளிக்கும் முக்கிய வங்கிகளில் ஒன்றாக, உலக வங்கி உள்ளது. இந்த வங்கி, அமெரிக்காவின் வாஷிங்டன் நகரை தலைமையிடமாக கொண்டு இயங்கி வருகிறது. அதே போல், உலக வங்கியிடம் இந்தியா உட்பட பல்வேறு நாடுகள் கடன் பெற்று நாட்டிற்கு தேவையான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. இந்நிலையில், இந்த வங்கியின் நிர்வாக இயக்குனர் மற்றும் மூத்த நிதி ஆலோசகராக இந்தியாவை சேர்ந்த பெண்ணான் அன்ஷுலா கன்ட் நியமிக்கப்பட்டுள்ளார்.
உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்த அன்ஷுலா காந்த், கடந்த 35 ஆண்டுகள் வங்கித்துறையில் அனுபவம் பெற்றவர். தற்போது ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவின் தலைமை நிதி அதிகாரியாக பதவி வகித்து வருகிறார். கடந்த 1983 ஆம் ஆண்டு முதல் ஸ்டேட் பேங்கில் பொது மேலாளர் பதவியில் இருந்து தற்போது தலைமை நிதி அதிகாரி வரை பல்வேறு பொறுப்புகளை வகித்துள்ளார்.
35 ஆண்டுகளாக வங்கித்துறையில் அன்ஷுலா ஆற்றிய பணிகளை கொண்டு, உலக வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிதி அதிகாரியாக அவரை தேர்ந்தெடுத்ததாக உலக வங்கியின் தலைவர் டேவிட் மல்பாஸ் தெரிவித்துள்ளார். முதல் முறையாக உலக வங்கியின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமை நிதி அதிகாரியாக இந்தியாவைச் சேர்ந்த அன்ஷுலா காந்த் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், உலக வங்கியின் முதல் பெண் தலைமை நிதி அதிகாரி என்ற பெருமையும் இவரையே சாரும்.