திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த வெவ்வேறு சமூகத்தினரான சங்கர் மற்றும் கவுசல்யா இருவரும் காதல் திருமணம் செய்து கொண்டனர். இதையடுத்து அவர்கள் இருவரையும் கொலை செய்யும் நோக்கில் கவுசல்யாவின் குடும்பத்தினர் அவர்களை நடுரோட்டில் வைத்து சரமாரியாக தாக்கினர். கடந்த 2016 மார்ச் 13 ஆம் தேதி நடந்த இந்த தாக்குதலில் சங்கர் பரிதாபமாக உயிரிழந்தார். பலத்த காயங்களுடன் கவுசல்யா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று உயிர் பிழைத்து வீடு திரும்பினார்.
இந்த சம்பவம் தொடர்பான வழக்கில் கவுசல்யாவின் தாய், தந்தை, தாய் மாமன் உட்பட 11 பேர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். திருப்பூர் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றம் இந்த வழக்கில் கடந்த 2017 டிசம்பர் மாதம் தீர்ப்பு அளித்தது. அதன்படி, கவுசல்யாவின் தந்தை சின்னசாமி உள்ளிட்ட 6 பேருக்கு மரண தண்டனையும், ஒருவருக்கு இரட்டை ஆயுள் தண்டனை, மற்றொரு குற்றவாளிக்கு ஐந்து ஆண்டுகள் சிறை தண்டனையும் வழங்கி உத்தரவிட்டது.
இந்நிலையில், கோவை மாவட்டம் வெள்ளலூரைச் சேர்ந்த பறை இசைக் கலைஞரும், நிமிர்வு என்ற கலைக்கூடத்தின் ஒருங்கிணைப்பாளருமான சக்தி என்பவரை கவுசல்யா சாதி மறுப்பு திருமணம் செய்துக்கொண்டார். இதற்கு பல்வேறு அரசியல் தலைவர்வர்களும், பிரபலங்களும் வாழ்த்துக்கள் கூறி வருகின்றனர்.
இந்நிலையில், இன்று நடிகர் சத்யராஜ் வீடியோ மூலம் சக்தி-கவுசல்யா தம்பதியனருக்கு வாழ்த்துக் கூறியுள்ளார். அவர் வீடியோவில் கூறியதாவது, "சாதி வெறியர்களின் முகத்தில் கரியை அள்ளிப் பூசிய கருஞ்சட்டைப் பெண்.. பெரியாரின் பேத்தி தோழர் கவுசல்யாவுக்கும், பறை அடித்து பகுத்தறிவைப் பரப்பும் பாசமுள்ள தோழன் சக்திக்கும் என்னுடைய மணமார்ந்த வாழ்த்து.
சலிப்பும் ஓய்வும் ஒரு சமூகப் போராளிக்கு தற்கொலைக்குச் சமம் - தந்தை பெரியார், கற்பி; ஒன்று சேர்; புரட்சி செய் - அண்ணல் அம்பேத்கர், பயத்தை விடு. இல்லையென்றால், லட்சியத்தை விடு - தலைவர் பிரபாகரன்.
இந்த மூன்று போராளிகளின் வீரத்தை, லட்சியத்தை மனதிலேன்றி, செயல்படும் தோழர் சக்திக்கும் தோழர் கவுசல்யாவுக்கும் மனமார்ந்த வாழ்த்துகள்..!! என்று சத்யராஜ் கூறியுள்ளார்.