தமிழகத்தின் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது!
வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு நிலை உருவாகும் சூழல் ஏற்பட்டுள்ள நிலையில், தமிழகத்தின் 11 மாவட்டங்களில் அடுத்த 24 மணி நேரத்தில் கனமழை பெய்யும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதனிடையே தமிழகத்தில் வடமாவட்ட துறைமுகங்களில் புயல் அபாய எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது.
கடந்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் மயிலாடுதுறையில் அதிகபட்சமாக 15 சென்டி மீட்டர் மழை பதிவாகி உள்ளது. இதே போன்று ஜெயங்கொண்டம், பூலாம்பாடியில் தலா 6 சென்டி மீட்டரும், அதிராம்பட்டினம், அரியலூர், திருவையாறு, திருமானூர், கும்பகோணம், திருவிடைமருதூர் ஆகிய ஊர்களில் தலா 5 செ.மீ மழையும் பெய்துள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் புவியரசன் கூறியுள்ளார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், அடுத்த 24 மணி நேரத்தில் தமிழகத்தில் 11 மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்றும் குறிப்பிட்டுள்ளது.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழகத்தில் அனேக இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் என்றும், வங்க கடலில் மத்திய, மேற்கு பகுதியில் உருவாகி உள்ள வளிமண்டல மேலடுக்கு சுழற்சி தமிழக, ஆந்திர கடலோரத்தை கடந்து தெலங்கானா வரை நீண்டுள்ளது என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த சுழற்சி காரணமாக வங்க கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. எனவே அடுத்த 24 மணி நேரத்திற்கு திருவள்ளூரில் இருந்து நாகை வரையுள்ள வடமாவட்ட மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாமென அவர் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை நகரை பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமானது வரையிலான மழை பெய்யக்கூடும் குறிப்பிடப்பட்டுள்ளது.