நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்!

கடந்தாண்டு நடைப்பெற்ற நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது!

Last Updated : Jan 24, 2020, 02:56 PM IST
நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்தது சென்னை உயர்நீதிமன்றம்! title=

கடந்தாண்டு நடைப்பெற்ற நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது!

மேலும் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு மறுதேர்தல் நடத்த வேண்டும் என்றும் தனது உத்தரவில் குறிப்பிட்டுள்ளது. புதிதாக தேர்தல் நடத்தப்படும் வரை, நடிகர் சங்கத்தை சிறுப்பு அதிகாரி கீதா தொடர்ந்து நிர்வகிப்பார் எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

கடந்தாண்டு ஜூன் மாதம் 23-ஆம் தேதி தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில், உறுப்பினர்கள் அளித்த புகாரின் அடிப்படையில், தேர்தலை நிறுத்தி வைத்து மாவட்ட பதிவாளர் ஜூன் 19-ம் தேதி உத்தரவிட்டார். இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் சங்க பொதுச்செயலாளர் விஷால் சென்னை உயர் நீதிமன்றத்தை நாடினார்.

இந்த வழக்கினை விசாரித்த உயர்நீதிமன்றம், தேர்தலை நடத்த அனுமதி அளித்தது. எனினும், வாக்கு எண்ணிக்கையை நிறுத்தி வைத்து உத்தரவிட்டது. இந்த உத்தரவின் அடிப்படையில் கடந்தாண்டு ஜூன் மாதம் 23-ஆம் தேதி தேர்தல் நடத்தி முடிக்கப்பட்டது.

இதனிடையே தபால் வாக்குகள் செலுத்த அனுமதிக்கவில்லை என்பதால் நடிகர் சங்கத்துக்கு நடத்தப்பட்ட தேர்தலை ரத்து செய்யக்கோரி உறுப்பினர்கள் ஏழுமலை உள்ளிட்டோர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இதற்கிடையில் நடிகர் சங்கத்தின் நிர்வாகத்தைக் கவனிக்க பதிவுத் துறை உதவி ஐஜி கீதாவை நியமித்து தமிழக அரசு உத்தரவு பிறப்பித்தது.

இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் சங்கத்தின் தலைவர் நாசர் மற்றும் பொருளாளர் கார்த்தி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்திருந்தனர். இந்த அனைத்து வழக்குகளையும் விசாரித்த நீதிபதி கல்யாணசுந்தரம், தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளி வைத்திருந்தார். இந்நிலையில் இந்த வழக்கின் தீர்ப்பு தற்போது வெளியானது. 

இந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் வெளியிட்டுள்ள தீர்ப்பில் குறிப்பிடுகையில்., கடந்தாண்டு நடைப்பெற்ற நடிகர் சங்க தேர்தலை ரத்து செய்து, நடிகர் சங்கத்திற்கு மறுதேர்தல் நடத்த வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளது. மேலும் புதிதாக தேர்தல் நடத்தப்படும் வரை, நடிகர் சங்கத்தை சிறுப்பு அதிகாரி கீதா தொடர்ந்து நிர்வகிப்பார் எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

புதிதாக வாக்களார் பட்டியலை தயாரித்து மூன்று மாதங்களுக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. 

Trending News