கணவருடனும், மகளுடனும் வாழ ஆசை - நளினியின் உருக்கமான பேட்டி

கணவருடனும், மகளுடனும் வாழ ஆசை என சிறையிலிருந்து வெளிவந்த நளினி தெரிவித்துள்ளார்.

Written by - க. விக்ரம் | Last Updated : Nov 13, 2022, 09:30 AM IST
  • 30 ஆண்டுகளுக்கு பிறகு சிறையிலிருந்து வெளிவந்தார் நளினி
  • மற்றவர்களுக்கு விடுதலையானார்கள்
  • கணவர், மகளுடன் வாழ ஆசை என நளினி உருக்கம்
கணவருடனும், மகளுடனும் வாழ ஆசை - நளினியின் உருக்கமான பேட்டி title=

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்துவரும் நளினி, ரவிச்சந்திரன், முருகன், சாந்தன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரையும் விடுதலை செய்து உச்ச நீதிமன்றம் நேற்று தீர்ப்பளித்தது. இந்த வழக்கில் தீர்ப்பளித்த நீதிபதிகள் பி.ஆர்.கவாய், பி.வி.நாகரத்னா ஆகியோர் அடங்கிய அமர்வு, ”கடந்த 30 ஆண்டுகளுக்கும் மேலாக சிறைத் தண்டனை அனுபவித்து வரும் நளினி, ரவிச்சந்திரன், சாந்தன், முருகன், ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ஆகிய 6 பேரும், உச்ச நீதிமன்றத்துக்குரிய பிரத்யேக அதிகாரத்தைப் பயன்படுத்தி விடுதலை செய்யப்படுகிறார்கள்" என்று தீர்ப்பளித்தது. 

இதனையடுத்து சிறையிலிருந்து 6 பேரும் விடுவிக்கப்பட்டனர். சிறையிலிருந்து வெளியில் வந்த நளினி செய்தியாளர்களிடம் பேசுகையில், “கடந்த 32 ஆண்டுகளாக எங்களை மறக்காமல் உறுதுணையாக இருந்த தமிழக மக்களுக்கு நன்றி. 32 ஆண்டுகள் சிறையில் இருந்தது கஷ்டமாகத் தான் இருந்தது. 32 ஆண்டுகள் போய்விட்டது. இதன்பிறகு என்ன சந்தோசம் உள்ளது. ஆனாலும், விடுதலைக்கு உதவிய அனைத்து தமிழ் நெஞ்சங்களுக்கும் என்னுடைய நன்றிகள். எனக்கு நிறைய பேர் விடுதலைக்கு உதவியுள்ளார்கள். அவர்கள் இல்லையென்றால், என்னால் இதை கடந்துவந்திருக்க முடியாது.

எனது மகள் இங்குவர இப்போதைக்கு வாய்ப்பில்லை. நானும் எனது கணவரும் லண்டன் சென்று அவளைச் சந்திப்போம். விடுதலையை சிலர் விமர்சித்திருக்கிறார்கள். எல்லோருக்கும் கருத்து சுதந்திரம் உள்ளது. இது சகஜமான ஒன்றுதான். எல்லோருக்கும்ம் ஒரேபோல் கருத்து இருக்க முடியாது. மற்றவர்களின் கருத்தை ஏற்க வேண்டும், உள்வாங்க வேண்டும்.

மேலும் படிக்க | 10 சதவீத இட ஒதுக்கீடு - மறு சீராய்வு மனு தாக்கல்... அனைத்துக் கட்சி கூட்டத்தில் தீர்மானம்

ஆளுநர் காவல் துறையில் பணிபுரிந்தவர். ராஜீவ் படுகொலையில் காவல்துறையை சேர்ந்த 7 பேர் உயிரிழந்துள்ளனர். அதனால், அவர் எனக்கு விடுதலை தர முடியும் என்பதை நான் எப்படி எதிர்பார்க்க முடியும். படுகொலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு அனுதாபங்கள். அவர்கள் விடுதலையை எதிர்க்கலாம். ஆனால், 32 வருடங்கள் சிறையில் இருந்துவிட்டோம். அவர்களுக்கு இது திருப்தியாக இல்லையா என்று தெரியவில்லை. ராஜீவ் காந்தி படுகொலை சம்பவத்தில் உயிரிழந்தவர்களுக்கு எனது அனுதாபங்களை தெரிவித்துக்கொள்கிறேன். அவர்களுக்கு நிவாரணம் கிடைத்தது குறித்து தெரிந்துகொள்ள விரும்புகிறேன்.

சோனியா காந்தியையோ, ப்ரியங்கா காந்தியையோ சந்திப்பதற்குவாய்ப்பே இல்லை. என்னை விட்டுவிடுங்கள். யாரையும் சந்திக்கும் வாய்ப்பில்லை. பிரியங்கா என்னை சிறையில் சந்தித்து சென்ற பிறகு அவர் பத்திரமாக வீடு திரும்ப வேண்டும் என்று எத்தனை முறை பிரார்த்தனை செய்தேன் என்பது எனக்கு மட்டுமே தெரியும். இனி நான் நானாக இருப்பேன். என்னை ஏற்றுக்கொள்பவர்கள் ஏற்றுக்கொள்ளட்டும். தமிழ்நாட்டு மக்கள் மீது எனக்கு நிறைய நம்பிக்கை உள்ளது. தமிழ்நாட்டு மக்கள் என்னை கண்டிப்பாக ஏற்றுக்கொள்வார்கள். மாற்று கருத்து உள்ளவர்களை எதுவும் செய்ய முடியாது. ஐந்து விரல்களும் ஒரேபோல் இருக்க முடியாது.

இனி நான், எனது கணவர், எனது குழந்தை என வாழப்போகிறேன். நாங்கள் இனியாவது சந்தோசமாக வாழ ஆசைப்படுகிறோம். பொதுவாழ்க்கையில் ஈடுபடும் எண்ணமெல்லாம் இல்லை. எனது மகளுக்கு இங்கிலாந்தில் கிரீன் கார்டு ஹோல்டர். அவள் எங்களை அழைத்துச் செல்வதாக தெரிவித்திருக்கிறார்” என்றார்.

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில்https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ 

Trending News