விவசாயம்சார் கண்டுப்பிடிப்புகளுக்கு தலா ரூ. 2 லட்சம் பரிசு! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

வேளாண்மையில் புதிய உள்ளூர் விவசாய தொழில்நுட்பம், புதிய இயந்திரங்கள் கண்டுபிடிப்பு, இயற்கை வேளாண்மை மற்றும் வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்படும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

Written by - ZEE TAMIL NEWS | Last Updated : Mar 11, 2022, 05:28 PM IST
விவசாயம்சார் கண்டுப்பிடிப்புகளுக்கு தலா ரூ. 2 லட்சம் பரிசு! மு.க.ஸ்டாலின் அறிவிப்பு title=

இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்,  வேளாண்மையில் புதிய உள்ளூர் தொழில்நுட்பம், புதிய இயந்திரங்கள் கண்டுபிடிப்பு, இயற்கை வேளாண்மை, விளைபொருள் ஏற்றுமதி ஆகியவற்றில் சிறந்து விளங்கும் விவசாயிகளை 2021-22 ஆம் ஆண்டிலிருந்து இனி ஒவ்வொரு வருடமும் தமிழ்நாடு அரசு ஊக்குவித்து பரிசளிக்கும். இதன் தொடர்ச்சியாக, 2021-22 ஆம் ஆண்டில் உள்ளூர் புதிய விவசாய தொழில்நுட்பங்களையும், இயந்திரங்களையும் கண்டுபிடிக்கும் விவசாயிகளை ஊக்குவித்து ரூபாய் 2 லட்சம் பரிசு வழங்கப்படவுள்ளது. அதே போன்று, இயற்கை வேளாண்மை மற்றும் வேளாண் ஏற்றுமதியில் சிறந்து விளங்கும் விவசாயிகளையும் ஊக்குவித்து தலா ரூபாய் 2 லட்சம் பரிசு வழங்கப்படவுள்ளது.

மேலும் படிக்க | பிளஸ் 2 தேர்வுக்கு முன்பே அட்மிஷன்: கொக்கி போடும் பொறியியல் கல்லூரிகள்

இப்போட்டியில் கலந்து கொள்ள விரும்பும் விவசாயி, முதலில் கைபேசியில் உழவன் செயலி மூலமாகத் தனது பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும். இப்போட்டியில் குத்தகைக்கு சாகுபடி செய்பவர்களும் கலந்து கொள்ளலாம். இதற்கு அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர்களைத் தொடர்பு கொண்டு, உரிய விண்ணப்பப் படிவத்தினை பூர்த்தி செய்து வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் நுழைவுக்கட்டணமாக நூறு ரூபாய் செலுத்த வேண்டும். பின்னர் கட்டணம் செலுத்திய இரசீதுடன் விண்ணப்ப படிவத்தை இணைத்து சமர்ப்பிக்க வேண்டும். 

தகுதியான விவசாயிகளின் கண்டுபிடிப்புகள் மாவட்ட தேர்வுக்குழுவால் தேர்வு செய்யப்பட்டு, பின் மாநிலக்குழுவிற்குப் பரிந்துரை செய்யப்படும். அதன் பின்பு விண்ணப்பங்கள் மாநிலக்குழுவால் பரிசீலிக்கப்பட்டு புதிய உள்ளூர் வேளாண் தொழில்நுட்ப கண்டுபிடிப்பிற்கு ஒரு விவசாயியையும் புதிய வேளாண் இயந்திர கண்டுபிடிப்பிற்கு ஒரு விவசாயியையும் தேர்வு செய்து தலா ஒரு லட்சம் வீதம் பரிசு வழங்கப்படும்.

இயற்கை வேளாண்மையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு முதல் பரிசாக ரூபாய் ஒரு இலட்சமும், இரண்டாம், மூன்றாம் பரிசாக முறையே 60 ஆயிரம், 40 ஆயிரம் ரூபாயும் வழங்கப்படும். அதேபோன்று, வேளாண் ஏற்றுமதியில் சிறப்பாக செயலாற்றும் விவசாயிக்கு பரிசாக ரூ.2 லட்சமும் வழங்கப்படவுள்ளது. 

விண்ணப்பத்திற்கான கால அவகாசம், மார்ச் 18-ம் தேதியுடன் முடிவடைய இருப்பதால், தகுதியுள்ள விவசாயிகள் உடனடியாக தங்கள் பகுதியிலுள்ள வட்டார வேளாண்மை உதவி இயக்குநர், துணை இயக்குநர் (தோட்டக்கலைத் துறை), வேளாண்மை துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) ஆகியோர்களைத் தொடர்பு கொண்டு பயனடையுமாறு வேளாண்மை உற்பத்தி ஆணையர் மற்றும் அரசு செயலர், வேளாண்மை உழவர் நலத்துறை சி.சமயமூர்த்தி, தெரிவித்தார்கள்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

மேலும் படிக்க: 2 மாநிலங்களில் மட்டுமே ஆட்சி...காங்கிரஸின் பரிதாப நிலை

முகநூலில் @ZEETamilNews, டிவிட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ இந்துஸ்தான் செயலியை பதிவிறக்குங்கள்!!

Android Link - https://bit.ly/3hDyh4G

Apple Link - https://apple.co/3loQYeR

Trending News