அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பிரெட் கவனாக் பதவியேற்றுள்ளார்.
அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டின் நீதிபதியாக பிரெட் கவனாக்கை அதிபர் டொனால் டிரம்ப் பரிந்துரை செய்தார். ஆனால் பிரெட் கவனாக் மீது பாலியல் துன்புறுத்தலுக்கான குற்றச்சாட்டுகள் எழுந்தன.
இந்த நிலையில் நேற்று செனட் சபையில் நீதிபதி நியமன ஒப்புதலுக்கான வாக்கெடுப்பு நடக்க இருந்தது. அதற்கு சில மணிநேரத்திற்கு முன் ஆயிரக்கணக்கான போராட்டக்காரர்கள் ஒன்று கூடி வாஷிங்டன் நகரில் பேரணியாக சென்றனர். அவர்கள் கவனாக்கிற்கு எதிராக கோஷங்களை எழுப்பியபடி ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
இந்நிலையில் அமெரிக்க செனட் சபையில் நிரந்தர உறுப்பினர்கள் மத்தியில் இதற்கான முதல் ஓட்டெடுப்பு நேற்று மதியம் நடைபெற்றது. ஓட்டெடுப்பில் 51 ஓட்டுகள் ஆதரவாகவும், 49 ஓட்டுகள் எதிராகவும் பிரெட் கவனாக்குக்கு கிடைத்தது. இதனால் டிரம்பின் நியமனத்திற்கு அமெரிக்க செனட் சபை உறுதியளித்து. இதனையடுத்து 53 வயது நிறைந்த பிரெட் கவனாக் நேற்றிரவு அமெரிக்க சுப்ரீம் கோர்ட் நீதிபதியாக பதவியேற்று கொண்டார்.
வரும் நவம்பர் 6ம் தேதி இடைக்கால தேர்தல்கள் நடைபெற உள்ள நிலையில், கவனாக் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதியாக உறுதி செய்யப்பட்டு உள்ளது டிரம்பிற்கும் மற்றும் அவரது ஆளும் குடியரசு கட்சிக்கும் கிடைத்த அரசியல் வெற்றியாக கூறப்படுகிறது.