Budget 2025: நிர்மலா சீதாராமன் சேலையில் சொன்ன செய்தி... பின்னணியில் பீகார் - என்ன விஷயம்?

Budget 2025 Highlights: பட்ஜெட் தாக்கல் செய்வதற்கு நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இன்று பீகார் பாரம்பரியமிக்க சேலையை அணிந்துவந்த நிலையில், அதன் பின்னணி குறித்து இங்கு காணலாம்.

Written by - Sudharsan G | Last Updated : Feb 1, 2025, 02:43 PM IST
  • பீகாருக்கு இன்று 7 சிறப்பு திட்டங்கள் அறிவிக்கப்பட்டன.
  • நிர்மலா சீதாராமன் இன்று பீகாரின் மதுபானி ஸ்டைல் சேலையை அணிந்திருந்தார்.
  • பீகாரில் இந்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெறுகிறது.
Budget 2025: நிர்மலா சீதாராமன் சேலையில் சொன்ன செய்தி... பின்னணியில் பீகார் - என்ன விஷயம்? title=

Budget 2025 Highlights, Nirmala Sitharaman Saree: மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், 2024-25 நிதியாண்டில் மத்திய நிதிநிலை அறிக்கையை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்தார். நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர், குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் நேற்று தொடங்கியது. 

பட்ஜெட்டுக்கு முன் தாக்கல் செய்யப்பட வேண்டிய பொருளாதார அறிக்கையையும் நிர்மலா சீதாராமன் நேற்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். நாட்டின் பொருளாதார செயல்திறன், அரசின் கொள்கைகள் மற்றும் வர இருக்கும் நிதியாண்டிற்கான எதிர்கால திட்டமிடல்கள் ஆகியவற்றின் சுருக்கத்தை இந்த பொருளாதார அறிக்கையில் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்நிலையில், இன்று நிர்மலா சீதாராமன் பட்ஜெட் உரையை காலை 11 மணிக்கு தொடங்கினார். நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கடுமையான அமளியில் ஈடுபட்டனர். அமளிக்கு மத்தியில் பட்ஜெட்டை தாக்கல் செய்தார். முழுமையாக 1 மணிநேரம் 17 நிமிடங்கள் அவர் பட்ஜெட் உரையை வாசித்தார். 

Budget 2025: டிஜிட்டல் முறையில் பட்ஜெட்

அதற்கு முன், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் ராஷ்டிரபதி பவனில் குடியரசு தலைவர் திரௌபதி முர்முவை சந்தித்து ஆசி பெற்றார். அப்போது திரௌபதி முர்மு, நிர்மலா சீதாராமனுக்கு இனிப்பு கலந்த தயிரை ஊட்டி பட்ஜெட் தாக்கல் செய்தவதற்கு அவரது வாழ்த்துகளையும் தெரிவித்தார். தொடர்ந்து நாடாளுமன்ற விரைந்தார், நிர்மலா சீதாராமன். நாடாளுமன்றத்தில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பட்ஜெட்டிற்கு அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

மேலும் படிக்க | மத்திய பட்ஜெட் 2025: எந்தெந்த பொருட்களின் விலை உயர்கிறது, குறைகிறது.. லிஸ்ட் இதோ

2019ஆம் ஆண்டில் இருந்து தொடர்ச்சியாக 8வது முறையாக நிர்மலா சீதாராமன் பட்ஜெட் தாக்கல் செய்தார். மேலும், பட்ஜெட் முழுமையாக காகிதப் பயன்பாடு இன்றி டிஜிட்டல் வடிவத்தில் தாக்கல் செய்யப்படுகிறது. மேலும், முன்னர் பட்ஜெட் தாக்கல் செய்ய வரும் நிதி அமைச்சர்கள் கையில் பட்ஜெட் ஆவணங்கள் அடங்கிய சூட்கேஸ் (பாஹி-கட்டா) உடன் வருவார்கள். டிஜிட்டல் நடைமுறை வந்ததில் இருந்து நிர்மலா சீதாராமன் டேப்லெட்டுக்கு சிவப்பு நிற உறை அணிவித்து அதன்மூலம் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். இந்த பாஹி-கட்டா (கணக்கு புத்தகம்) என்பது கணக்கியல் மற்றும் பதிவேடு வைக்கும் இந்திய லெட்ஜர் ஆகும். 

Budget 2025: நிர்மலா சீதாராமன் அணிந்த மதுபானி சேலை

இந்நிலையில் நாடாளுமன்றத்தில் பாஹி-கட்டாவுடன் வருகை தந்தபோது, நிர்மலா சீதாராமன் இன்று அணிந்திருந்த சேலை பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. பீகாரின் பாரம்பரிய மிக்க மதுபானி கலை வேலைப்பாட்டுடன் கூடிய வெண்மை நிற சேலையை நிர்மலா சீதாராமன் அணிந்திருந்தார். 2021ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதுபெற்ற துலாரி தேவி இந்த சேலையை அவருக்கு பரிசாக அளித்தார். மிதிலா ஆர்ட் இன்ஸ்டிட்யூட்டில் கிரெடிட் அவுட்ரீச் செயல்பாட்டிற்காக நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், பீகார் மதுபானிக்குச் சென்றபோது, ​​அவர் துலாரி தேவியைச் சந்தித்தார். அப்போதுதான் அவருக்கு துலாரி தேவி இந்த சேலையை பரிசளித்தார்.

அந்த வகையில், இன்றைய பட்ஜெட் அறிவிப்பில் பீகார் மாநிலத்திற்கு பல்வேறு அறிவிப்புகள் வெளியாகி உள்ளன. பீகார் மாநிலத்திற்கு என்று மட்டும் தனியாக ஏழு திட்டங்கள் அறிவிக்கப்பட்டுள்ளது. பீகார் மாநிலம் பாட்னாவில் உள்ள ஐஐடி விரிவுபடுத்தப்படும் என்றும், பீகாரில் உணவு பதப்படுத்துதல் தேசிய நிறுவனம் அமைக்கப்படும் என்றும் பீகார் மாநிலத்திற்கு என புதிய நீர் பாசன திட்டங்கள் அறிவிப்பு என்றும் பாட்னாவில் மேலும் ஒரு புதிய விமான நிலையம் அமைக்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

Budget 2025: பீகார் பின்னணி என்ன?

பீகாரில் இந்தாண்டு சட்டப்பேரவை தேர்தல் நடைபெற இருக்கிறது. பீகாரில் ஆளுங்கட்சியான நிதிஷ்குமாரின் ஐக்கிய ஜனதா கட்சியுடன் பாஜக மாநிலத்திலும், மத்தியிலும் கூட்டணியில் உள்ளது. சட்டமன்றத் தேர்தல் வருவது ஒருபுறம், மற்றொன்று தற்போதைய மத்திய அரசு சிக்கல் இல்லாமல் இயங்குவதற்கு பீகார் முதல்வர் நிதீஷ் குமாரின் ஆதரவு மிக மிக முக்கியம். அப்படியிருக்க, இதை வெளிக்காட்டும் விதமாகவே நிர்மலா சீதாராமன் பீகார் பாரம்பரியமிக்க சேலையை அணிந்துள்ளார் என கூறப்படுகிறது. 

மேலும் படிக்க | இனி யாரெல்லாம் வரி கட்ட தேவையில்லை? பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்பு!

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News