மோடி எதிர்ப்பு கருத்துக்களால் ஊடகங்கள் என்னை சிக்க வைக்க முயற்சிப்பது குறித்து பிரதமர் கேலி செய்தார் என அபிஜித் பானர்ஜி தெரிவித்துள்ளார்!!
தலைநகர் டெல்லியில் உள்ள பிரதமரின் அதிகாரபூர்வ இல்லத்தில், நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜி பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினார். இந்த சம்திப்பு குறித்த புகைப்படங்களை பிரதமர் நரேந்திர மோடி, தனது டுவிட்டர் பக்கத்தில், புகைப்படங்களை பகிர்ந்துள்ளார்.
அந்த பதிவில், "பொருளாதாரத்திற்கான நோபல் பரிசு பெற்ற அபிஜித் பானர்ஜியுடனான சந்திப்பு, மிகச்சிறப்பாக இருந்ததாக, பிரதமர் மகிழ்ச்சித் தெரிவித்திருக்கிறார். அனைவருக்கும் அதிகாரமளித்தல் என்ற அவரது பார்வை தெளிவாக இருப்பதாகவும்" பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார்.
மேலும், பல்வேறு பிரிவுகளில், இருவருக்கும் இடையே, ஆரோக்கியமான மற்றும் விரிவான கலந்துரையாடல் நடைபெற்றதாகவும், பிரதமர் குறிப்பிட்டிருக்கிறார். அபிஜித் பானர்ஜியின் எதிர்கால திட்டங்கள் அனைத்தும் சிறப்பாக அமைந்திட மனமார்ந்த வாழ்த்துக்களை உரித்தாக்குவதாக, பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார்.
Excellent meeting with Nobel Laureate Abhijit Banerjee. His passion towards human empowerment is clearly visible. We had a healthy and extensive interaction on various subjects. India is proud of his accomplishments. Wishing him the very best for his future endeavours. pic.twitter.com/SQFTYgXyBX
— Narendra Modi (@narendramodi) October 22, 2019
இதையடுத்து செய்தியாளர்களை சந்தித்த அபிஜித் பானர்ஜி செய்தியாளர்களிடம் கூறுகையில்; மோடி எதிர்ப்பு விஷயங்களைச் சொல்வதில் ஊடகங்கள் என்னை எவ்வாறு சிக்க வைக்க முயற்சிக்கின்றன என்பது பற்றி நகைச்சுவையாகப் பிரதமர் பேசினார். அவர் டிவி பார்த்து வருகிறார், அவர் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறார், நீங்கள் என்ன செய்ய முயற்சிக்கிறீர்கள் என்பது அவருக்கு நன்றாக தெரியும்" என தெரிவித்தார்.
2019 ஆம் ஆண்டு பொருளாதாரத்திற்கான நோபல் பரிசுக்கு பொருளியல் நிபுணர்கள் அபிஜித் பானர்ஜி, எஸ்தர் டூப்லோ, மைக்கேல் கிரீமர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். அந்த வரிசையில், அபிஜித் பானர்ஜி இந்தியாவின் மேற்குவங்க மாநிலம் கோல்கட்டாவில் பிறந்தவர். இந்தியாவின் பொருளாதாரம் மோசமான நிலையில் உள்ளது எனவும், அதன் பிரச்னையை அரசு உணர்ந்தாலும் அதைவிட வேகமாக பொருளாதாரம் மோசமாக சென்றுக் கொண்டிருக்கிறது எனவும் அபிஜித் விமர்சித்தது குறிப்பிடத்தக்கது.