நடப்பு ஆண்டு அரசு தேர்வு கால அட்டவணை வெளியீடு!

நடப்பு ஆண்டிற்கான அரசு தேர்வு அட்டவணையை வெளியிட்டது தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம். 

Last Updated : Jan 6, 2018, 02:07 PM IST
நடப்பு ஆண்டு அரசு தேர்வு கால அட்டவணை வெளியீடு! title=

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் 2018ம் ஆண்டிற்கான தேர்வுக் கால அட்டவணையை வெளியிட்டுள்ளது.

தேர்வாணையத்தால் வெளியிடப்படும் இத்தேர்வுக் கால அட்டவணை என்பது எந்தெந்த பதவிகளுக்கான அறிவிக்கைகள், நடப்பு ஆண்டில் வெளியிடப்படவுள்ளது  என்பதை தேர்வாணையத்தின் தேர்வுக்காக படித்துக்கொண்டிருக்கும் விண்ணப்பதாரர்களுக்கு  முன்கூட்டியே தெரிவிக்கும், ஒரு தோராயமான பட்டியல் ஆகும். இப்பட்டியல் முற்றிலும் தற்காலிகமானது மற்றும் மாறுதலுக்கு உட்பட்டது. தேர்வர்கள் நலம் கருதி அவர்கள் தங்களை தயார் செய்துகொள்ள ஏதுவாகவே இவ்வட்டவணை வெளியிடப்படுகிறது.

இப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள 3235காலிப்பணியிடங்களை உள்ளடக்கிய  23 பணிகள் /  பதவிகளுக்கான அறிவிக்கை மற்றும் உத்தேச தேர்வு நாள் குறித்த விவரம் வெளியிடப்பட்டுள்ளது.

இதில் பட்டியலிடப்பட்ட பணிகள்/பதவிகளில் ஏதேனும் ஒரு சில பதவிக்களுக்குத் தவிர்க்க முடியாத சில காரணங்களுக்காக அட்டவணைக்குரிய காலத்திற்குள் அறிவிக்கை வெளியிட முடியாமல் போகும் தருணங்களில் அடுத்து வரும் ஆண்டிற்குக் கொண்டு செல்லக் கூடும். 

தேவை ஏற்படும் தருணங்களில் பட்டியலில் குறிப்பிடப்படாத பணிகள் /பதவிகளுக்கும் அறிவிக்கை வெளியிடப்படும்.

இந்தக் காலிப்பணியிட எண்ணிக்கை தேர்வுக்கு முன்னரோ அல்லது தேர்விற்குப் பிறகும் கூட மாறுதலுக்குட்பட்டது.

கடந்த மூன்று ஆண்டுகளின் வருடாந்திர கால அட்டவணையின்படி தேர்வாணையத்தால் நட்த்தி முடிக்கப்பெற்ற சிறப்புச் செயல்பாடுகள்:

2015ம் ஆண்டில் வெளியிடப்பட்ட 12 அறிவிக்கைகள் மூலம், அனைத்து 12 தேர்வுகளும், நடத்தப்பட்டு 5028காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

2016ம் ஆண்டில் வெளியிடப்பட்ட 17அறிவிக்கைகளுக்கும், தேர்வுகள் நடத்தப்பட்டு 6383காலிப்பணியிடங்கள் நிரப்பப்பட்டுள்ளன.

2017ம் ஆண்டில் 12218காலிப்பணியிடங்களை நிரப்பும் பொருட்டு வெளியிடப்பட்டத் தேர்வுக்கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டிருந்த அனைத்து பதவிகளுக்கான அறிவிக்கைகளும் முழுமையாக வெளியிடப்பட்டதுடன், கூடுதலாக அட்டவணையில் தெரிவிக்காத பதவிகளூக்கும் சேர்த்து மொத்தமாக 24 பதவி /பணிகளுக்கான அறிவிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன. அவற்றில் 18 தேர்வுகள் நடத்தப்பட்டு மீதமுள்ள 6 தேர்வுகள் நடப்பு ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் நடத்தப்படவுள்ளன.

மேலும் கடந்த இரண்டாண்டு காலத்தில் பல்வேறு போட்டித் தேர்வுகள் தொடர்பான, 99பாடத்திட்டங்கள் வல்லுநர்குழு கொண்டு மேம்படுத்தப்பட்டுள்ளன.மேலும் கடந்த 5 வருட காலத்தில் தேர்வுகள் நடத்தப்பட்டு பல்வேறு காரணங்களால் முடிவு செய்யப்படாமல் இருந்த தேர்வு முடிவுகளும் வெளியிடப்பட்டு பணி நியமனம் செய்யப்பட்டுள்ளது.

இக்கால அட்டவணையில் குறிப்பிடப்பட்டுள்ள அனைத்துத் தேர்வுகளின் முடிவுகள் உரிய காலத்தில் வெளியிட நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன.தேவை ஏற்படின், இப்பட்டியலில் குறிப்பிடப்பட்டுள்ள செய்திகள் சார்ந்த எந்த ஒரு மாற்று அறிவிப்பையும் வெளியிடுவதற்கான உரிமையைத் தேர்வாணையம் தன்னகத்தே கொண்டுள்ளது.

Trending News