விஜய்யை விமர்சித்த திருமாவளவன்! கொதித்தெழுந்த தவெக தொண்டர்கள்!

விஜய் அரசியல் புராணக் கதைகளில் வரும் வாமன அவதாரத்தால் மட்டுமே முடியும் என்று தொல். திருமாவளவன் தெரிவித்திருந்த நிலையில், விஜய் கட்சி தொண்டர்கள் தற்போது அவருக்கு பதிலடி கொடுத்து வருகின்றனர்.  

Written by - RK Spark | Last Updated : Oct 29, 2024, 02:10 PM IST
  • விஜய்க்கு எதிராக திருமாவளவன் அறிக்கை.
  • தவெக தொண்டர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
  • X தளத்தில் திருமாவிற்கு எதிர் கருத்து தெரிவிக்கின்றனர்.
விஜய்யை விமர்சித்த திருமாவளவன்! கொதித்தெழுந்த தவெக தொண்டர்கள்! title=

கடந்த ஞாயிற்றுக்கிழமை தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாடு நடைபெற்றது. இதில் விஜய் பல முக்கிய கருத்துக்களை பேசி இருந்தார். குறிப்பாக கூட்டணி கட்சிகளுக்கு பதவி கொடுக்கப்படும் என்று தெரிவித்து இருந்தார். இது தமிழக அரசியலில் பேசு பொருளாக மாறியது. இந்நிலையில் விஜய்க்கு பதிலடி கொடுக்கும் விதத்தில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் தொல் திருமாவளவன் அறிக்கை வெளியிட்டு இருந்தார். அதில், "தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் நடிகர் விஜய் அவர்கள்  27- 10- 2024 அன்று விக்கிரவாண்டியில்  நடைபெற்ற தனது கட்சியின் முதல் மாநாட்டில் ஆற்றிய உரையில் சில விழைவுகளை வெளிப்படுத்தியுள்ளார். சில நிலைப்பாடுகளையும் முன்மொழிந்துள்ளார். தனது கட்சி ஆளுங்கட்சியாகப் பரிணமிக்க வேண்டுமென அவர் ஆசைப்படுவது அவருக்கான சுதந்திரம்! நம்பிக்கை! ஆனால், பரிணாமத்தில் பல்வேறு படிநிலை மாற்றங்களை கடந்த பின்னரே உச்சநிலை மாற்றத்தை எட்டமுடியும் என்பது தவிர்க்க முடியாத அறிவியல் உண்மை! 

மேலும் படிக்க | தமிழகத்தை கொள்ளையடிக்கும் திராவிட மாடல் ஆட்சி-விஜய் அட்டாக்!!

'முதல் அடி மாநாடு! அடுத்த அடி ஆட்சிப் பீடம்! ' என்பதாக அவரது விழைவு அதீத வேட்கையையும் அசுர வேகத்தையும் கொண்டதாகவுள்ளது. அது புராணக் கதைகளில் வரும் வாமன அவதாரத்தால் மட்டுமே முடியும். அவரது நம்பிக்கைக்கு வாழ்த்துகள். "பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்" என்னும் வள்ளுவப் பெருமானின் சமத்துவக் கோட்பாட்டினைத் தனது முதன்மையான கொள்கையென உயர்த்திப் பிடிக்கும் அவர்,  'பெரும்பான்மை - சிறுபான்மை' என்னும் பெயரிலான "பிளவுவாதத்தை" ஏற்பதில்லை என்றும் கூறுகிறார். இந்த நிலைப்பாடு பாஜக உள்ளிட்ட சங்பரிவார்களுக்கு எதிரானது என்பதைப் போன்ற தோற்றத்தைக் காட்டுகிறது. 

ஆனால், சங்பரிவார்களின் மதவழி பெரும்பான்மைவாதமும், அதனால் நிலவும் மதவழி சிறுபான்மையினருக்கு எதிரான பாதுகாப்பற்ற சூழலும் ஒன்றா என்னும் கேள்வி எழுகிறது. குறிப்பாக, சிறுபான்மையினரின் வாழ்வுரிமைப் பாதுகாப்புக் குறித்த அவரது நிலைப்பாடு என்ன என்பதுவும் கேள்விக் குறியாகிறது. அடுத்து, ஃபாசிசம் குறித்து அவர் கூறியிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. ஃபாசிசம் என்பது பற்றிய அவரது புரிதல் விளங்கவில்லை. "அவங்க ஃபாசிசம்'னா நீங்க பாயாசமா ?" என ஆவேசமாக கேள்வி எழுப்புகிறார். ஃபாசிச எதிர்ப்பாளர்களைக் கேலி் செய்கிறார். அவர் ஃபாசிசத்தை எதிர்க்க வேண்டியதில்லை என்கிறாரா? அல்லது எதிர்ப்பவர்களும் ஃபாசிஸ்டுகள் தான் என்கிறாரா?  அவர் யாரை நையாண்டி செய்கிறார்? திமுக'வையா? காங்கிரசையா? இடது சாரி கட்சிகளையா? அல்லது புரட்சியாளர் அம்பேத்கர், தந்தை பெரியார் இயக்கங்களையா? 

பாஜக - சங்பரிவார்களின் ஃபாசிசத்தை எதிர்க்கும் இவர்கள் அனைவருமே ஃபாசிஸ்டுகள்தான் என்று கிண்டலடிக்கிறாரா? தமிழ்நாடு அல்லது இந்தியாவைப் பொருத்தவரையில் "ஃபாசிச எதிர்ப்பு" என்பது பாஜக-சங் பரிவார் எதிர்ப்பு தான். இங்கே ஃபாசிச எதிர்ப்பு என்பது தேவையற்றது என்று அவர் கருதுகிறாரா? அப்படியெனில், பாஜக- சங்பரிவார் எதிர்ப்பு வேண்டாம் என கூறுகிறாரா? என்ன பொருளில்  அந்த நையாண்டி தொனிக்கும் ஆவேச உரை  வெடித்தது? பிளவு வாதத்தை எதிர்ப்பதாகக் கூறுவதன் மூலம் பாஜகவை எதிர்ப்பதைப்போன்ற தோற்றம் ஒருபுறம். ஃபாசிச எதிர்ப்பைக் கிண்டல் செய்வதன் மூலம் பாஜக எதிர்ப்புத் தேவையில்லை என்பதைப் போன்ற தோற்றம் இன்னொரு புறம். இது என்னவகை நிலைப்பாடு?  "கூட்டணியில் இணைய வருவோருக்கு ஆட்சியதிகாரத்தில் பங்கு" என்கிற ஒரு புதிய நிலைபாட்டை தமிழக அரசியல் களத்தில் முதன் முதலாக முன்மொழிந்துள்ளார். இது அரசியல் களத்தில் அவர் வீசும் அணுகுண்டு என்றும் பெருமிதம் பொங்கக் கூறியுள்ளார். ஆனால், இது யுத்த களத்தில், உரிய நேரத்தில், உரிய இலக்கில் வீசியதாகத் தெரியவில்லை. அது அவர் எதிர்பார்க்கும் விளைவை ஏற்படுத்துமா எனத் தெரியவில்லை. 

"திமுக எதிர்ப்பும்  திமுக கூட்டணியைப் பலவீனப்படுத்துதலுமே" அவரது அதிதீவிர விழைவாகவும் வரலாற்று முன்மொழிவாகவும் உள்ளது. அவரது உரையில் வெளிப்படும்  "அதிகார வேட்கையும் அடையாள அரசியலும்" பழைய சரக்குகளே! குடும்ப அரசியல் எதிர்ப்பு , ஊழல் ஒழிப்பு போன்றவையும் பழைய முழக்கங்களே! ஆக்கப்பூர்வமான- புதுமையான நிலைப்பாடுகளோ செயல்திட்டங்களோ அவற்றுக்கான புரட்சிகர முன்மொழிவுகளோ ஏதுமில்லை. "பண்டிகை காலத்து தள்ளுபடி விற்பனை போல" ஆட்சியதிகாரத்தில் பங்கு என்கிற அரசியல் உத்தி வெளிப்பட்டுள்ளது. 'அதிமுகவுக்கு முன்னர் நாம் முந்திக் கொள்ள வேண்டும்' என்கிற அவசர கதியில் இப்படி அறிவித்துவிட்டார்களோ எனத் தோன்றுகிறது.  ஆஃபர் (OFFER) என்பது அரசியல் களத்தில் கடைசி அஸ்திரமாகத் தான் இருக்க வேண்டும். இயன்றவரை மறைமுக செயல்திட்டமாகவும் இருத்தல் வேண்டும். ஆனால், டிமான்ட் (DEMAND) என்பது முன்கூட்டியே கோருவதாகவும் வெளிப்படையாகவும் இருக்கலாம். ஒட்டுமொத்தத்தில்,  பல இலட்சம் பேர் முன்னிலையில் நடந்து முடிந்த இன்னொரு படப்பிடிப்பைப் போல இந்த மாநாடு நடந்தேறியுள்ளது" என்று தெரிவித்து இருந்தார்.

மேலும் படிக்க | தமிழகத்தை கொள்ளையடிக்கும் திராவிட மாடல் ஆட்சி-விஜய் அட்டாக்!!

இதற்கு விஜய் கட்சியினர் தற்போது பதிலடி கொடுத்து வருகின்றனர். அர்ஜுன் தமிழீழவன் என்பவர், "இந்த பதிவு உங்களின் அரசியல் முதிர்ச்சி என்பது 2MP seat ல் அடங்கி விடுகிறது என்பது நன்றாக தெரிகிறது! உங்களை நம்பி இருப்பவர்களுக்கு ஆழ்ந்த அனுதாபங்கள்... ஒரு பாசிஸ எதிர்ப்பு போராளி கமெண்ட் போட முடியாம மூடி வைப்பது முறையா? ஒட்டுமொத்தத்தில்,  பல இலட்சம் பேர் முன்னிலையில் நடந்து முடிந்த இன்னொரு படப்பிடிப்பைப் போல இந்த மாநாடு நடந்தேறியுள்ளது" என்று கூறியுள்ளார். சங்கீதா என்ற கணக்கில் இருந்து, " நீல சாயம் வெளுத்து போச்சு டும் டும் டும் டும்... ஒரு அரசியல் கட்சி பரிணமிக்க படிநிலை மாற்றங்களை கடந்த பின்னர் தான் உச்ச நிலை எட்ட முடியும் என்று கூறுகிறீர்கள் எப்படி சார் உங்களை போன்று 1, 2.. 5,6.. சீட்டுக்கள் வாங்கி இன்னும் வளர்ந்து கொண்டே இருக்கிறீர்களே அதுபோலவா?

பாசிசம் என்றால் என்ன என்று உங்களுக்கு உதாரணம் சொல்லுகிறேன் சார். உங்கள் கொடி கம்பங்களையும் பேனர்களையும் அதிகாரங்களை கையில் வைத்துக் கொண்டு அகற்றுவதும் வேங்கைவயல் விவகாரத்தில் அரசு எதுவும் நடவடிக்கை எடுக்காமல் இருக்கிறதே இவை எல்லாம் பாசிசம் இல்லாம பாயாசமா சார்.
கூட்டாட்சி தத்துவம் உங்களுக்கு பண்டிகை கால offer போல இருக்கிறது என்கீறீர்கள்? அது கடைசி அஸ்திரம் என்கிறீர்கள் நீங்கள் எல்லாம் மக்களுக்கான அரசியல் செய்கிறீர்களா அல்ல மங்காத்தா ஆடுகிறீர்களா?எங்கள் தலைவர் எதிலும் மக்களுடன் வெளிப்படையாக இருப்பவர் மறைமுக செயல்திட்டமே கிடையாது. 

எங்கள் தலைவர் நேற்று வெளியிட்டது கட்சி கொள்கைகள் தான் தேர்தல் அறிக்கை அல்ல நீங்கள் ஏதோ எதிர் கட்சியின் தேர்தல் அறிக்கையை விமர்சனம் செய்வது போல் விமர்சனம் செய்திருக்கிறீர்கள். நீங்கள் ஒரு மாநாடு போட்டீர்களே மது ஒழிப்பு மாநாடு என்று அதுதான் படப்பிடிப்பு போல் இருந்தது சார். உங்கள் கட்சிக்காகவும் உங்கள் தொண்டர்களுக்காகவும் பேச முடியாத நீங்கள் திமுகவுக்காக பேசுகிறீர்கள் என்றால் நீங்களும் அடிமைப்பட்டு கிடக்கிறீர்களோ என்ற சந்தேகம் வருகிறது. உங்களின் இந்த அறிக்கையால் உங்கள் மீது வைத்திருந்த மதிப்பும் மரியாதையும் போய்விட்டது இதே போல் பல லட்சம் தொண்டர்களின் மதிப்பையும் ஓட்டையும்  நீங்கள் இழக்க போவது உறுதி" என்று தெரிவித்துள்ளார்.

மேலும் படிக்க | Vijay Speech | விஜய் தெறி..தெறி ஸ்பீச்..! பாஜக, நாதக, திமுக, அதிமுக எல்லாத்துக்கும் ஒரே அடி

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..

முகநூல் - @ZEETamilNews

ட்விட்டர் - @ZeeTamilNews

டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews 

வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r

அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News