IND vs BAN: படுதோல்வி அடைந்த இந்தியா... புலியாக பாய்ந்தது பங்களாதேஷ்!

IND vs BAN: ஆசிய கோப்பை தொடரில் வங்கதேச அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் மோசமான தோல்வியை அடைந்துள்ளது. 

Written by - Sudharsan G | Last Updated : Sep 16, 2023, 12:13 AM IST
  • ஷகிப் அல்-ஹசன் பிளேயர் ஆப் தி மேட்ச்சாக தேர்வானார்.
  • கில் சதம் அடித்ததும் வீண்.
  • இந்தியாவின் பின் வரிசை வீரர்களும் சொதப்பினர்
IND vs BAN: படுதோல்வி அடைந்த இந்தியா... புலியாக பாய்ந்தது பங்களாதேஷ்! title=

IND vs BAN: ஆசிய கோப்பை தொடர் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. அதாவது, இந்தியா - இலங்கை அணிகள் வரும் செப். 17ஆம் தேதி நடைபெற உள்ள இறுதிப்போட்டியில் மோத உள்ளது. 50 ஓவர் வடிவத்திற்கான ஐசிசி உலகக் கோப்பை தொடர் அடுத்த மாதம் இந்தியாவில் நடைபெற உள்ள நிலையில், இந்த ஆசிய கோப்பை அதற்கான முன்னோட்டமாக பார்க்கப்பட்டது. 

சரியான முன்னோட்டம்

வலிமையான அணியாக பார்க்கப்பட்ட பாகிஸ்தான் அணி சூப்பர் 4 சுற்றில் பாகிஸ்தானிடம் உதை வாங்கி இறுதிப்போட்டிக்கு கூட தகுதிபெறவில்லை. ஆப்கானிஸ்தான் அணியும் நூலிழையில் சூப்பர் 4 சுற்றுக்கு தகுதிபெறாமல் வெளியேறிவிட்டது. அந்த வகையில், ஆசிய கோப்பை தொடர் உலகக் கோப்பைக்கு சிறந்த முன்னோட்டமாக இருந்துள்ளது. செப். 17ஆம் தேதி சாம்பியனாகுபவர்கள் நிச்சயம் உலகக் கோப்பை தொடரின் நாக்-அவுட்டிற்கு தகுதிபெற அதிக வாய்ப்பிருக்கும். 

5 மாற்றங்கள்

இந்நிலையில், சூப்பர் 4 சுற்றின் சம்பிரதாய போட்டியாக பார்க்கப்ட்ட ஆட்டத்தில் இந்தியா - வங்கதேசம் அணிகள் மோதின. இலங்கை கொழும்பு பிரேமதாச சர்வதேச கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற போட்டியில் இந்திய அணி கேப்டன் ரோஹித் சர்மா டாஸ் வென்று முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். குறிப்பாக, விராட் கோலி, ஹர்திக் பாண்டியா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், ஜஸ்பிரித் பும்ரா ஆகியோருக்கு ஓய்வளிக்கப்பட்டு சூர்யகுமார் யாதவ், திலக் வர்மா, ஷமி, பிரசித் கிருஷ்ணா, ஷர்துல் தாக்கூர் ஆகியோருக்கு வாய்ப்பளிக்கப்பட்டது. 

மேலும் படிக்க | ஆசியக் கோப்பையை வென்று தரவரிசையில் முதலிடம் பிடிக்குமா இந்திய அணி? சாத்தியக்கூறுகள்

இந்தியா மோசமான ஃபீல்டிங்

முதலில் பேட்டிங் செய்த வங்கதேச அணி, 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுகளை இழந்து 265 ரன்களை எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஷகிப் அல்-ஹசான் 80 ரன்களையும், தோவ்ஹித் ஹிரிதோய் 54 ரன்களையும், நசும் அகமது 44 ரன்களையும் எடுத்தனர். இந்திய அணியின் பந்துவீச்சு தரப்பில் ஷர்துல் 3, முகமது ஷமி 2, பிரசித் கிருஷ்ணா 1 விக்கெட்டையும் எடுத்தனர். இந்திய அணியின் ஃபீல்டிங் மிக மோசமானதாக இருந்தது. 

கில் சதம்

266 ரன்களை இலக்காக இறங்கிய இந்திய அணிக்கு ரோஹித் 0, திலக் 5 ரன்களில் ஆட்டமிழந்து அதிர்ச்சி அளித்தனர். கில் ஒருபக்கம் நிலைத்து நின்று விளையாடினாலும் ராகுல் 19, இஷான் கிஷன் 5, சுர்யகுமார் 27 ரன்களுக்கும் ஆட்டமிழந்தனர். ஜடேஜாவும் 7 ரன்களில் ஆட்டமிழக்க அக்சர் படேல் 7ஆவது வீரராக களமிறங்கினார். அவரும் சற்று உறுதுணையாக நிற்க கில் சதம் அடித்து அசத்தினார். அவர் 133 பந்துகளில் 8 பவுண்டரிகள், 5 சிக்ஸர்களையும் அடித்து 121 ரன்களில் ஆட்டமிழக்க, போட்டி வங்கதேசம் பக்கம் திரும்பியது. 

சொதப்பிய மிடில் ஆர்டர்

அக்சர் படேல் ஆட்டத்தை முடித்து கொடுப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. மறுமுனையில் ஷர்துல் 11 ரன்களில் ஆட்டமிழந்தார். 49ஆவது ஓவரில் ஒரு பவுண்டரியை அடித்த அக்சர் அடுத்த பந்தில் தூக்கியடிக்க முயற்சித்து கேட்ச் கொடுத்து காலியானார். இதனால், கடைசி ஓவருக்கு 12 ரன்கள் தேவைப்பட்டது. மூன்று பந்துகளில் 1 ரன்கள் கூட எடுக்கப்படாத நிலையில், நான்காவது பந்தில் ஷமி ஒரு பவுண்டரியை அடித்தார். வெற்றிக்கு இன்னும் 8 ரன்கள் தேவைப்பட்டது. ஆனால், ஐந்தாவது பந்தில் ஸ்கொயர் லெக் திசையில் அடித்துவிட்டு இரண்டு ரன்கள் ஓடப் பார்த்தார், அதில் ரன்-அவுட்டாக இந்தியா ஆல்-அவுட்டானது. 

அதன்மூலம், இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் வங்கதேசத்திடம் தோல்வி அடைந்தது. முஸ்தபிஷ்யூர் ரஹ்மான் 3, டன்ஸிம் ஹசன் ஷாகிப் 2, மெகதி ஹசன் 2 விக்கெட்டுகளை எடுத்தனர். பிளேயர் ஆப் தி மேட்ச்சாக ஷகிப் அல்-ஹசன் தேர்வானார். இது சூப்பர்-4 சுற்றில் எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது என்றாலும், இது உலகக் கோப்பைக்கு முன் இந்திய அணிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் படிக்க | ஜோடியாக ரன்களை குவிக்க கெமிஸ்ட்ரி அவசியம்! உலகின் சிறந்த பேட்டிங் ஜோடிகள்

சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்! 

உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்.

முகநூலில் @ZEETamilNews, ட்விட்டரில் @ZeeTamilNews மற்றும் டெலிக்ராமில் https://t.me/ZeeTamilNews என்ற பக்கத்தை லைக் செய்யவும்.

கல்வி, பொழுதுபோக்கு, அரசியல், விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!

Android Link: https://bit.ly/3AIMb22

Apple Link: https://apple.co/3yEataJ

Trending News