Tamil Nadu Assembly News: தமிழ்நாட்டின் 2024ஆம் ஆண்டின் முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது. ஆளுநர் உரையுடன் இந்த கூட்டத்தொடர் தொடங்குவதும் மரபு என்பதால் ஆளுநர் ஆர்.என்.ரவி இன்று சட்டப்பேரவைக்கு வந்தார். அவரை முறைப்படி சபாநாயகர் அப்பாவு வரவேற்று, அவைக்கு அழைத்துச் சென்றார்.
ஆளுநர் ஆர்.என். ரவி தனது உரையை "அனைவருக்கும் வணக்கம்" என தமிழில் பேசி தொடங்கினார். அனைவருக்கும் ஆங்கில புத்தாண்டு வாழ்த்தை தெரிவித்தார். தொடர்ந்து உரையை வாசிக்காமல் ஆர்.என்.ரவி பேசியதாவது,"தேசிய கீதத்திற்கு உரிய மரியாதையை கொடுக்கவும், உரையின் தொடக்கத்திலும் முடிவிலும் அதை இசைக்க வேண்டும் என்ற எனது பலமுறை கோரிக்கைகளும் அறிவுரைகளும் புறக்கணிக்கப்பட்டுள்ளன.
ஆளுநரின் குற்றச்சாட்டுகள்
இந்த உரையில் இடம்பெற்றுள்ள பல பத்திகளின் மீது எனக்கு தார்மீக அடிப்படையிலும், தகவல் ரீதியிலும் உடன்பாடு இல்லை. தமிழ்நாடு அரசு தயாரித்து இருக்கக்கூடிய உரையில் பல்வேறு கருத்துக்கள் தனக்கு ஒத்துப் போகாமல் இருப்பதால் அதை வாசித்தால் அரசியல் அமைப்பு சட்டத்திற்கு எதிரானதாக இருக்கும். எனவே சட்டப்பேரவைக்கு மரியாதை செலுத்தும் நோக்கில் எனது உரையை முடிக்கிறேன். இந்த அவை தமிழக மக்களின் நலனுக்கான பயனுள்ள விவாதம் நடைபெறும் இடமாக அமைய வாழ்த்துகள்" என்றார்.
மேலும் படிக்க | மீண்டும் முரண்.. அரசு தயாரித்த உரையை படிக்காமல் தவிர்த்த ஆளுநர்
ஆளுநர் தனது இருக்கையில் அமர்ந்த உடனேயே தமிழ்நாடு அரசு தயாரித்துக் கொடுத்த உரையின் தமிழாகத்தை சபாநாயகர் அப்பாவு முழுமையாக வாசித்தார். அது வரையிலும் ஆளுநர் ஆர்.என்.ரவி இருக்கையில் அமர்ந்திருந்தார்.
ஆளுநரிடம் சபாநாயகர்...
தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு பேசிய போது,"ஆளுநர் உரைக்கு தயாரிப்புகள் எல்லாம் ஒப்புதல் பெற்று வாசிப்பதற்காக வந்தார். ஆளுநர் குறைவாக வாசித்தார்கள், அதை நான் குறையாக சொல்லவில்லை. கொள்கை வேறுபாடு இருந்தாலும் மாண்போடு நடத்துவது தான் தமிழக அரசின் பண்பு. சிஏஏ சட்டத்தை ஒருபோதும் தமிழ்நாடு அனுமதிக்காது.
வெள்ளம் புயல் ஏற்பட்டபோது ஒரு பைசா கூட நிதி தரவில்லை. பல லட்சம் கோடி ரூபாய் பிஎம் கேர் ஃபண்டில் (PM Care Fund) உள்ளது. இந்திய மக்களால் கணக்கு கேட்க முடியாத ஃபண்டில் இரண்டாவதாக 50 ஆயிரம் கோடி ரூபாயை வாங்கித் தந்தால் நன்றாக இருக்கும் என நானும் கேட்கலாமே..." என ஆளுரின் செயலுக்கு உதாரணம் கூறுவது போல் பேசினார்.
அவைக்குறிப்பில் இருந்து எவையெல்லாம் நீக்கம்
சபாநாயகர் பேசும்போது தனது உதவியாளரிடம் "அவர் என்ன பேசுகிறார்?" என்பது போல் கேட்டறிந்த ஆளுநர், உடனே அவையில் இருந்து புறப்பட்டார். கடந்தாண்டை போலவே இந்தாண்டும் தேசிய கீதம் இசைக்கப்படுவதற்கு முன்னர் ஆளுநர் ஆர்.என். ரவி அவையில் இருந்து புறப்பட்டார். தொடர்ந்து பேசிய சபாநாயகர்,"சவாகர் வழியில் வந்தவர்களுக்கும், கோட்சே வழியில் வந்தவர்களுக்கும் தமிழ்நாடும் சரி, தமிழ்நாட்டு சட்டமன்றமும் சரி எந்த வகையிலும் சளைத்ததில்லை" என்றார்.
ஆளுநர் புறப்பட்ட நிலையில், அரசு தயாரித்து அனுப்பிய ஆங்கிலம் மற்றும் தமிழ் உரைகள் மட்டுமே அவைக்குறிப்பில் இடம்பெற வேண்டும் என அவை முன்னவர் துரைமுருகன் தீர்மானத்தை முன்மொழிந்தார். அந்த தீர்மானமும் சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டது. அதன்படி, அரசு தயாரித்து கொடுத்த ஆளுநர் உரை மட்டுமே அவை குறிப்பில் இடம்பெறும். ஆளுநர் ஆர்.என். ரவி பேசிய கருத்துகளும், சபாநாயகர் ஆளுநரை நோக்கி பேசிய கருத்துகளும் அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்பட்டது.
சபாநாயகரின் முழு விளக்கம்
தொடர்ந்து, தேசிய கீதம் குறித்து ஆளுநர் ரவி வைத்த குற்றச்சாட்டுக்கு அப்பாவு விளக்கம் அளித்தார். அதாவது, இதுகுறித்து கடந்தாண்டே ஆளுநர் ரவி தன்னிடம் கோரிக்கை வைத்ததாகவும் அதுகுறித்து சுமுகமாக முடிவெடுக்கப்பட்டுவிட்டதாகவும் சபாநாயகர் தெரிவித்தார். தொடர்ந்து, சட்டப்பேரவை விதியின்படி, பேரவை தொடக்கத்தின்போது தமிழ் தாய் வாழ்த்தும், நிறைவின்போது நாட்டுப் பண்ணும் (தேசிய கீதம்) இசைக்கப்படுவதுதான் மரபு என்றும் அப்பாவு சட்டப்பேரைவையிலேயே விளக்கம் அளித்தார்.
மேலும் படிக்க | 'இதுதான் மரபு...' ஆளுநர் ரவியின் குற்றச்சாட்டுக்கு அப்பாவு விளக்கம் - முழு விவரம்
தொடர்ந்து, அப்பாவு கூட்டத்திற்கு பின் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பிலும் இதனை உறுதி செய்தார். கோட்சே, சாவார்க்கர் குறித்து பேசியதால்தான் ஆளுநர் வெளியேறியதாக பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் அப்பாவு மீதும் குற்றச்சாட்டு வைத்தார். சட்டப்பேரவையின் மரபை அப்பாவு மீறியதாகவும் கூறினார்.
எடப்பாடி பழனிசாமி கூறியது என்ன?
தொடர்ந்து சட்டப்பேரவை வளாகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய எடப்பாடி பழனிசாமி, ஆளுநர் உரையில் இருந்து திமுக அரசின் அறிவிப்புகள் உப்பு சப்பில்லாதது, ஊசிப்போன உணவு பண்டம் ஆகும் என்றார். தேசிய கீதம் சர்ச்சை குறித்து கேட்டதற்கு தமிழ்நாடு முதலமைச்சர், சபாநாயகர், ஆளுநர் ஆகியோர்தான் இதுகுறித்து தகுந்த முடிவெடுக்க முடியும் என்றார். மரபு படிதான் அப்பாவு நடக்கிறார் என்றால், துணை எதிர்க்கட்சித் தலைவருக்கான இருக்கை ஒதுக்கீட்டில் பாரபட்சம் ஏன் என்றும் கேள்வி எழுப்பினார்.
தென்மாநில ஆளுநர்களின் திருவிளையாடல்கள்
மேலும், செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சட்டத்துறை அமைச்சர் ரகுபதி பேசியதாவது, "தமிழ்நாடு எல்லா துறைகளிலும் முதலிடத்தில் இருக்கிறது என்பதை புள்ளி விவரங்களோடு சொல்லும்போது அதை ஏற்றுக்கொள்ளுகிற மன பக்குவம், தாங்கி கொள்ளும் சக்தி ஆளுநருக்கு இல்லை.
இன்னும் ஒரு 2 நிமிடங்கள் பொறுத்து இருந்து தேசிய கீதத்தையும் மதித்து உரிய மரியாதயோடு ஆளுநர் சென்றிருக்க வேண்டும். கேரள ஆளுநர் 2 நிமிடம் உரையை வாசித்தார், தமிழ்நாடு ஆளுநர் உரையை வாசிக்கவே இல்லை. இது தென்மாநிலங்களில் உள்ள ஆளுநர்களின் திருவிளையாடல்கள்" எனவும் அவர் விமர்சனம் வைத்தார்.
பிப். 22ஆம் தேதி வரை சட்டப்பேரவை கூட்டம்
சட்டப்பேரவை கூட்டத்திற்கு பின் சபாநாயகர் தலைமையில் அலுவல் ஆய்வுக் குழு நடைபெற்றது. தொடர்ந்து, ஆளுநர் உரை மீதான விவாதம் 14, 15 தேதிகளில் நடைபெற இருப்பதாக அறிவிக்கப்பட்டது. சட்டபேரவை பிப் 22 வரை நடைபெறும் என்றும் அலுவல் ஆய்வுக்குழு கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது. பிப்.19ஆம் தேதி பட்ஜெட், பிப். 20ஆம் தேதி வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.
மேலும் படிக்க | டிஜிபி ராஜேஷ்தாஸ்க்கு 3 ஆண்டு சிறை உறுதி! நீதிமன்றம் உத்தரவு!
சார்பில்லாத சமரசமில்லாத செய்திகள் உங்கள் உள்ளங்கைகளில்!
உடனுக்குடன் செய்திகளைத் தெரிந்து கொள்ளவும், உங்கள் கருத்துகளைப் பகிர்ந்து கொள்ளவும் சமூக வலைத்தளங்களில் எங்களைப் பின்தொடருங்கள்..
முகநூல் - @ZEETamilNews
ட்விட்டர் - @ZeeTamilNews
டெலிக்ராம் - https://t.me/ZeeTamilNews
வாட்ஸ்-அப் - https://whatsapp.com/channel/0029Va5XFvI90x2plF9cKY1r
அரசியல், கல்வி, பொழுதுபோக்கு, விளையாட்டு, சுகாதாரம், வாழ்க்கை முறை, சமூக, வேலைவாய்ப்பு என அனைத்து வகையான செய்திகளையும் தமிழில் பெற இப்போது ஜீ தமிழ் நியூஸ் செயலியைப் பதிவிறக்குங்கள்!!
Android Link: https://bit.ly/3AIMb22
Apple Link: https://apple.co/3yEataJ